நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.
இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைத்ததற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், III சார்ள்ஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஆகியோரின் பிரத்தியேக வாழ்த்துச் செய்திகளையும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கையளித்தார்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானிகர், கல்வித்துறை உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி கிட்டுமென உறுதியளித்தார்.