திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் அங்கு ஒரு வீட்டில் இருந்த 14 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தேனி மாவட்டம், தொப்பம்பட்டியைச் சேர்ந்த கருமலை (50), உத்தமபாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (40), முருகன்( 42), பல்லடம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (53). நண்பர்களான இந்த நான்கு பேரும் சேர்ந்து ஆன்லைனில் போலி தங்க பிஸ்கட்டை வாங்கி அதற்குத் தங்க முலாம் பூசி ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆன்லைனில் ஒரு போலி தங்க பிஸ்கட் ரூ.500 என்று 5 பிஸ்கட்டுகளை ரூ.2500-க்கு வாங்கி உள்ளனர்.
பின்னர், நகை புரோக்கர்களான ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த அர்ஜுன் ஆகியோரிடம் தங்க பிஸ்கெட் விற்பனைக்கு இருப்பதாகவும்; பல்லடம் மகாலட்சுமி நகருக்கு வந்தால் தங்க பிஸ்கட்களை விற்பனை செய்வதாகவும் கருமலை கும்பல் தெரிவித்துள்ளனர். உண்மையான தங்க பிஸ்கட்டுகள் என்று நம்பிய சுரேஷ், அதைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளார். இதை தனது நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி காசிராஜாவிடம் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல திட்டம் தீட்டிய காசிராஜா தனது கூட்டாளிகளான விஜயகுமார், கோபிநாத், கிருஷ்ணன், சுரேஷ் ரகு, மணிராஜ், மணி ஆகிய எட்டு பேருடன் பல்லடம் மகாலட்சுமி நகரில் உள்ள மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதற்கிடையே தங்க பிஸ்கெட் விற்பனை தொடர்பாக ரகசிய தகவல் வரவே அங்கு சென்ற பல்லடம் போலீஸார் ரௌடி காசிராஜா உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து, கருமலை கும்பலிடம் இருந்த 5 போலி தங்க பிஸ்கட்டுகள், காசிராஜா கும்பலிடம் இருந்து இரண்டு கத்தி, ஹாக்கி பேட், அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். 14 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி தங்க பிஸ்கட்டுகளை பறிப்பதற்கான போட்டியில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.