மும்பை: இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு கோல்டு பிளே (cold play). இந்த குழுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அடுத்த ஆண்டு ஜனவரி 18, 19, 21 ஆகியதேதிகளில் கோல்டு பிளேவின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.
இந்த இசைக் கச்சேரிக்காக மொத்தம் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் இணையம் வாயிலாக அண்மையில் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.6,450ஆகவும் அதிகபட்ச டிக்கெட் விலைரூ.35,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புக் மை ஷோ இணையத்தில் கடந்த 23-ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஒரே நேரத்தில் 1.3 கோடி பேர் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது.
இணையம் மீண்டும் செயல்பட தொடங்கிய 30 நிமிடங்களில் 1.5 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்நிலையில், கோல்டு பிளே இசைக்கச்சேரிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சில சட்டவிரோத இணையதளங்களில் ரூ.6,450 மதிப்பு கொண்ட டிக்கெட் ரூ.1 லட்சத்துக்கும், ரூ.12,500 மதிப்பு கொண்ட டிக்கெட் ரூ.10 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மும்பையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்குகூட இசைக்கச்சேரிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை. இதுகுறித்து புக் மை ஷோ தலைமை செயல் அதிகாரி அனில் உள்ளிட்டோரிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இசைக்கச்சேரி நடைபெறும் நாட்களில் பல்வேறு நகரங்களில்இருந்து மும்பைக்கு செல்வதற்கான விமான கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.