Health: பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? – உண்மை என்ன? | Amla

பல கடைகளிலும் பெரிய நெல்லிக்காய் தற்போது கண்களில் தட்டுப்படுகிறது. இதன் மருத்துவ குணங்கள் பற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ.தீபா.

”நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும்.

நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை.

Amla

பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம். அதே நேரம், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு பெரிய நெல்லிக்காயின் சுவை அவ்வளவாகப் பிடிக்காது. அதனால், குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Dr. Deepa

நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.