ராமேசுவரம்: இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
உலகில் பல வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன்னரே இலங்கையில் 1931-ம் ஆண்டே ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான வாக்குரிமை வழங்கப்பட்டது. சிரிமாவோ பண்டார நாயக்க-வை 20.07.1960-ல் முதல் இலங்கை பெண் பிரதமராக மட்டுமின்றி, உலகின் முதல் பெண் பிரதமராக ஆக்கிய பெருமை இலங்கை மக்களுக்கு உண்டு. இதேபோன்று அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க இலங்கையின் முதல் அதிபராக 1994-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்கள் என்ற நிலையில், பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டு 93 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக, இலங்கை நாடாளுமன்றத்தில் (2020 – 2024) மொத்த உறுப்பினர்கள் 225 பேரில், 12 பேர்கள் மட்டுமே பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இதில் தமிழர், முஸ்லிம், மலையகத்தைச் சேர்ந்த சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை.
முன்னதாக, இலங்கையில் பெண் உரிமை அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததன் விளைவாக 2018-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு முதன்முறையாக அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இலங்கையில் உள்ளாட்சி சபைகளில் 1.9 சதவீதமும் பெண்களின் இருந்த நிலையில் 1,991 பெண்கள் உள்ளாட்சி சபைகளில் உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்பினை பெற்றார்கள்.
கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் கட்சி (ஜேவிபி) யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபரானார். பதவியேற்ற மறுநாளே தனது கட்சியை சேர்ந்த ஹரிணி அமரசூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்தினார். இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பிரதமர் இலங்கையில் பதவியேற்றார். மேலும், இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்க மாகாணங்களில் உள்ள அரசியல் கட்சிகளில் இயங்கும் பெண்கள், குழுவாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“தற்போது புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் அநுர குமார திசாநாயக்க, பெண் பிரதமரை நியமித்து அரசியலில் பெண்களின் அதிகாரத்தைச் சமமாக பேணியிருக்கிறார். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. தமிழ் பெண்களாகிய எங்களுக்கு அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் சார்ந்துள்ள கட்சிகள் வழங்குவதில்லை.
நாங்கள் நீண்ட காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு வகையிலும் எங்களது உழைப்பை வழங்கி வருகிறோம். ஆனாலும் அரசியலில் நாங்கள் நேரடியாக ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் கற்ற, ஆழமாகச் சிந்திக்கக்கூடிய பெண்கள் அரசியல் இருந்து புறந்தள்ளப்படுகிறார்கள்.
பெண்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டு வருவதற்கும், பெண்களுக்கு பெண்களே வாக்களிப்பதற்கும் ஆளுமை மிக்க, தலைமைத்துவம் கொண்ட பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடை பெண்களுக்கு அளிக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்வர வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.