சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு ஐசிசி 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது. 26 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமா தான் செய்த ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாக 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசியின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. என்ன மாதிரியான ஊழல் குற்றச்சாட்டில் பிரவீன் ஜெயவிக்ரமா ஈடுபட்டார் என்பதை ஐசிசி வெளியிடவில்லை. இருப்பினும் சர்வதேச போட்டிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் போது இந்த விதி மீறல் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
“ஐசிசி சட்டப்பிரிவு 2.4.7-ன் கீழ் விதியை மீறியதாக இலங்கை வீரர் ஜெயவிக்ரமா ஒப்புக்கொண்டார். ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையையும் தடுப்பது, தாமதப்படுத்துவது, மறைப்பது, ஆதாரங்களை அழிப்பது அல்லது மாற்றி வைப்பது குற்றம் ஆகும். இதில் ஏதாவது ஒன்றை செய்தால் அதனை ஆதாரமாக எடுத்து கொண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஐசிசி தெரிவித்துள்ளது. குற்றசாட்டுகளை ஒப்புக் கொண்ட ஜெயவிக்ரமா கிரிக்கெட் விளையாட 1 வருட தடையை ஏற்றுக்கொண்டார். அதில் 6 மாத இடைநீக்கமும் பொருந்தும். அவர் சர்வதேச போட்டிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இந்த குற்றங்களை செய்துள்ளார்” என ஐசிசியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் சிறப்பாக விளையாடி இலங்கை அணிக்கு தேர்வானார் ஜெயவிக்ரமா. கடந்த 2021ம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமானார். முதல் போட்டியிலேயே போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் அதன் பிறகு பெரிதாக சோபிக்கவில்லை. மொத்தம் இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். மேலும் சர்வதேச அளவில் ஜெயவிக்ரமா 5 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2022ம் ஆண்டு சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். லங்கா பிரீமியர் லீக்கில் 2021 மற்றும் 2022ம் ஆண்டு யாழ்ப்பாண கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2023 தொடரில் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிக்காக விளையாடினார் ஜெயவிக்ரமா. இந்த ஆண்டு உள்நாட்டு லிஸ்ட் ஏ போட்டியில் மூர்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அதில் 4 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சமீபத்தில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா பொறுப்பேற்று இருந்தார். அவரின் கீழ் இலங்கை அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை வென்றது. கடந்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை பெற்ற இலங்கை அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. சனத் ஜெயசூர்யா இலங்கை அணியை ஒரு வெற்றிகரமாக அணியாக மாற்றி வருகிறார். சொந்த மண்ணில் வெற்றியை தாண்டி இங்கிலாந்து மண்ணிலும் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பெற்றது. 2023 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2024 டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவி இருந்தாலும் தற்போது மீண்டும் புத்துணர்ச்சி அடைந்து வருகிறது.