உறவுகளின் அவசியத்தை உணர்ச்சி பொங்கும் அழகான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.
தான் அதீதமாக நேசித்த விட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல் தவிக்கும் இளைஞனாக அவ்வளவு அழகாக உணர்சிகளை வெளிப்படுத்தி வாவ் சொல்ல வைத்தார் அரவிந்த்சாமியின் டீனேஜ் கதாபாத்திரத்தில் நடித்த சரண். தற்போது மலையாளம், கன்னடம், தெலுங்கு என மற்ற `வுட்’ களிலும் ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறார். மெய்யழகனுக்கு வாழ்த்துகளைக் கூறி ஒரு குட்டி சாட் போட்டோம்.
மெய்யழகனுக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க?
முதல்ல இயக்குநர் பிரேம் சார் ஸ்கிரிப்ட் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னாரு. ‘படிச்சுட்டு சொல்லு, உனக்கு ஓகேனா..பண்ணலாம்’னு அவர் சொன்னாரு. என்ன மனுஷன் இப்படி நேரடியாக எல்லா விஷயத்தையும் சொல்றாருனு படிச்சேன். அந்த கோவில் யானை காட்சி வரும்போதே நான் இந்த படத்தை பண்ணிடனும்னு முடிவு பண்ணிட்டேன். நான் மெய்யழகன்ல இணைஞ்சது இப்படிதான். படத்துல நீங்க பார்க்கிறதைவிட எனக்கு இன்னும் அதிகமான மான்டேஜஸ் ஷூட் பண்ணினோம். பிறகு தங்கை புவனாகூட இன்னொரு காட்சியும் இருந்தது. சொல்லப்போனால், இது இயக்குநருக்கு உண்மையாகவே அவருடைய வாழ்க்கைல நடந்தது. தஞ்சாவூர்ல இருந்து சென்னைக்கு ஈச்சர் வண்டியில பின்னாடி உட்கார்ந்து போகுறதுலாம் அவர் வாழ்க்கைல நடந்ததுதான். அந்த காட்சி எடுக்கும்போது அதை போட்டோ எடுத்து அவங்க அம்மாவுக்கு அனுப்பினாரு. இந்த படம் முடிஞ்சதும் அவர் எனக்கு கொடுத்த கமென்ட் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. கார்த்தி சாரும் என்னை பாராட்டினாரு.
கடல் படத்துல அரவிந்த்சாமிகூட குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருப்பீங்க, இப்போ அரவிந்த்சாமியோட டீனேஜ் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கீங்க… இந்த வளர்ச்சி எவ்ளோ சந்தோஷமாக இருக்கு?
சொல்லப்போனால், எனக்கு எமோஷனலாக இது ரொம்ப க்ளோஸ். `கடல்’ திரைப்படம்தான் என்னுடைய முதல் ப்ராஜெக்ட். அப்போ நான் அவர்கூட சின்ன பையனாக நடிச்சிருப்பேன். இப்போ 11 வருஷத்துக்குப் பிறகு அவரோட டீனேஜ் கேரக்டர்ல நான். இந்த விஷயத்தை நான் அரவிந்த்சாமி சார்கிட்டையும் சொன்னேன். அவரும் சந்தோஷப்பட்டாரு.
நான் அவர்கூட எடுத்த பழைய போட்டோஸை இப்போ இருக்கிற போட்டோஸோட சேர்த்து பார்க்கும்போது எனக்கு நாஸ்டாலஜியாவாக இருக்கு. `மெய்யழகன்’ பொறுத்த வரைக்கும் எமோஷன்ஸ் ரொம்பவே முக்கியம். பெர்ஃபார்ம் பண்றதுக்கு எனக்கான இடம் பிரேம் சார் கொடுத்தாரு. படப்பிடிப்பு தளத்துக்குப் போனதும் ‘போறேன் நான் போறேன்’ பாடலை ஹெட்போன்ல போட்டு கேட்கச் சொன்னாங்க. அப்படியே அந்த பாடலை இசைச்சுகிட்டே நானும் வீட்டுல நடந்தேன். பிரேம் சாருடைய அம்மாவுக்கு வீட்டுல இருக்கிற அம்மிக்கல்ல ஒரு எமோஷன் இருந்ததுனு சொன்னாரு. அந்த எமோஷனை வச்சுதான் அம்மிக்கல்லை எடுக்கிற காட்சி வச்சிருந்தாரு. அதே மாதிரி தங்கை புவனா கதாபாத்திரத்துல நடிச்சிருந்த குழந்தை ரொம்பவே நல்லா நடிச்சாங்க. அந்த காட்சியில ரெண்டு பேரும் சரியாக பண்ணினதுனாலதான் எமோஷன் சரியான மீட்டர்லையும் இருந்தது.
கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு பண்ணும்போது ஸ்டிரியோடைப் நடக்கும்! நீங்க இதுக்கு முன்னாடி மெயின் கதாநாயகன்களோட டீனேஜ் கதாபாத்திரத்துல நடிச்சதுனாலதான் தொடர்ந்து அது மாதிரியான கதாபாத்திரங்களுக்கு கூப்பிடுறாங்கனு எண்ணி வருத்தப்பட்டிருக்கீங்களா?
இல்லை. அப்படி நான் வருத்தப்பட்டது கிடையாது. அப்படியான எண்ணமும் எனக்கு இருந்தது கிடையாது. என்னுடைய கரியர்ல என்னுடைய பாதையை மாற்றிய திரைப்படம் `வடசென்னை’ தான். அந்த படத்துக்கு பிறகுதான் ‘கே.ஜி.எஃப் – 2′, `கிங் ஆஃப் கொத்தா’, ‘மெய்யழகன்’ படங்கள் அமைச்சிருக்கு. அடுத்ததாக நான் அர்ஜூன் சார் டைரக்ஷன்ல தெலுங்குல ஒரு படம் பண்ணீட்டு இருக்கேன். இப்படியான இயக்குநர்களும் படமும் அமைஞ்சதுக்கு மகிழ்ச்சிதான். அதுல ஸ்டிரியோடைப்ங்கிற பகுதிகுள்ளையே நான் போகமாட்டேன். இந்த மாதிரியான திரைப்படங்கள்தான் பண்ணனும்னு நான் முடிவு பண்ணினதே கிடையாது.
அர்ஜுன் சார் டைரக்ஷன்ல படம் நடிக்கிறதாக சொல்லியிருந்தீங்க..அவர்கூட ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலேயும் இருந்திருக்கீங்க….அவர் உங்களுக்கு எந்தளவுக்கு ஊக்கமளித்திருக்கிறார்?
அவர்கூட நல்லா நெருக்கமானது `சர்வைவர்’ நிகழ்ச்சியிலதான். ஆனா அதுக்கு முன்னாடியே நான் `கடல்’ படத்துல அவர்கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். அப்போ அதிகமான புகைப்படங்களும் அவர்கூட எடுத்திருந்தேன். அதையெல்லாம் நான் `சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு வரும்போது காமிச்சேன். அந்த ஷோவை தாண்டி எங்க அத்தனை பேரையும் அவர் அன்பாக பார்த்துப்பாரு. இப்போ சமீபத்துல ஒரு லைன் இருக்கு பேசலாம்னு கூப்பிட்டாரு. நீங்க என்னைக்கு வரணும்னு சொல்லுங்க..நான் வந்திடுறேன்னு சொன்னேன். அப்புறம் அவர் லைன் சொன்னாரு. அப்படி தொடங்கிய அந்த புராஜெக்ட்டும் இப்போ முடியப் போகுது.
`வடசென்னை’ உங்க கரியர்ல என்ன மாதிரியான நேர்மறையான விஷயங்களை உருவாக்கியிருக்கு? இப்போ உங்களுடைய `வடசென்னை’ காட்சிகளை வச்சு போடுற மொழிபெயர்ப்பு மீம்ஸ்லாம் பார்த்தீங்களா?
நான் `வடசென்னை’ படத்துக்கு பிறகு பண்ணின அத்தனை படங்களும் காரணம் வடச்சென்னை கண்ணா கதாபாத்திரம்தான். இதுக்குப் பிறகு வர்ற திரைப்படங்களுக்கும் வடசென்னைதான் காரணம்னு நான் நம்புறேன். பெர்ஃபார்ம் பண்றதுக்கு எனக்கு `கண்ணா’ மாதிரியான கேரக்டர் கிடைக்கலைனா… என்னுடைய பாதை கேள்விக்குறிதான். என்னைக்கும் வெற்றி மாறன் சாருக்கும், தனுஷ் சாருக்கும், வடசென்னைக்கு டீமுக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். என்னுடைய காட்சிகளை ஆங்கிலத்துல மொழிபெயர்ப்பு பண்ணின மீம்ஸை தனுஷ் சாருமே பார்த்து என்ஜாய் பண்ணினாரு.
நீங்க இயக்குநர் கே.பாலசந்தர் டைரக்ஷன்ல ‘அமுதா ஒரு ஆச்சரியக்குறி’ நாடகத்துல நடிச்சிருந்தீங்க? அந்த அனுபவம் பற்றி…
நான் கடல் திரைப்படம் பண்ணும்போதுதான் இந்த நாடகத்துல நடிச்சேன். எனக்கு அந்த வயசுல பெரிய முதிர்ச்சிதன்மை கிடையாது. `நம்ம என்ன பண்றோம்? சினிமானா என்ன?’ னு எதுவும் எனக்கு தெரியாது. நடிப்புனா இயக்குநர் சொல்றதை பண்ணனும்ங்கிறதுதான் என்னுடைய புரிதலாக இருந்துச்சு. திட்டு வாங்காமல் கே.பி சார் சொல்றதை பண்ணிடால் தப்பிச்சிடலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…