கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான தினேஷ் குண்டு ராவ் சாவர்க்கர் குறித்து பேசியிருப்பது, பா.ஜ.க-விடமிருந்து கடும் விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது. முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெங்களுருவில் நேற்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், “சாவர்க்கர் ஒரு பிராமணர். ஆனால், அசைவ உணவுகளை உண்பார். மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறார். அதோடு, பசு வதையை அவர் எதிர்க்கவில்லை. உண்மையில், இந்த விஷயத்தில் அவர் மிகவும் நவீனத்துவவாதியாக இருந்தார்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோரிடமிருந்து சித்தாந்த ரீதியாக சாவர்க்கர் வேறுபடுவதைக் குறிப்பிட்ட தினேஷ் குண்டுராவ், “இந்து கலாச்சார பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் காந்தி. சைவ உணவுகளை உண்பவர். அதேசமயம், தன்னுடைய அணுகுமுறையில் ஒரு ஜனநாயகவாதியாக இருந்தார். அதேபோல், முஸ்லிம்களுக்கு ஜின்னா ஒரு சின்னமாக உருவெடுத்தார். ஆனால், அவர் அடிப்படைவாதி இல்லை. சாவர்க்கர் தான் அடிப்படைவாதி” என்றார்.
தினேஷ் குண்டுராவின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து காங்கிரஸைச் சாடிய பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஆர்.அசோக், “காங்கிரஸின் கடவுள் திப்பு சுல்தான். காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் ஏன் எப்போதும் இந்துக்களைக் குறிவைக்கிறீர்கள்? முஸ்லிம்களை ஏன் இவ்வாறு பேசுவதில்லை? காங்கிரஸின் மனநிலையே இப்படித்தான் இருக்கிறது. தேர்தலில் இந்துக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு இந்துவும் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “முதலில் ராகுல் காந்தி சாவர்க்கரை அவதூறாகப் பேசத் தொடங்கினார். காங்கிரஸில் இப்போது மற்றவர்களும் அதைச் செய்கிறார்கள். இவர்களுக்கு சாவர்க்கரைப் பற்றி எதுவும் தெரியாது. சாவர்க்கரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறார்கள். பசு பிறந்தது முதல் இறக்கும் வரை விவசாயிக்கு உதவுவதால், அதற்கு கடவுள் அந்தஸ்து கொடுத்திருக்கிறோம் என பசுக்கள் பற்றிய தனது கருத்தை சாவர்க்கர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று காங்கிரஸை விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…