புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.83,000கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூருக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், 17 நாட்களில் இரண்டாவது முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்குக்கு சென்ற பிரதமர் ரூ.83,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதன் ஒரு பகுதியாக ரூ.83,300கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பிஎம் ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஜார்க்கண்ட் பழங்குடியின மக்கள் தற்போது சொந்த காங்கிரீட் வீட்டுக்கு உரிமையாளர்களாக மாறியுள்ளனர். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் பழங்குடியின சமூக நலன் மற்றும் மேம்பாடு தொடர்பானவை. இதன் மூலம், 549 மாவட்டங்களில் உள்ள 63,000 கிராமங்கள், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,740 தொகுதிகளில் வசிக்கும் 5 கோடி பழங்குடியின மக்கள் நேரடியாக பயனடைவர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜார்க்கண்ட் அரசின் பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் முடிவடைய உள்ளதால், அந்த மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.