இந்தியாவின் தேசப் பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தில் காந்தியின் பங்களிப்பை பலரும் நினைவுகூர்ந்தனர். அந்த வரிசையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரம் குறித்து காந்தி சொன்ன செய்தியை நினைவு கூர்ந்திருக்கிறார்.
காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மகாத்மா காந்தி ஒரு வலுவான செய்தியைக் கூறியிருக்கிறார். அந்தச் செய்தி, `கடைசி மனிதனையும் நினை’. 1947, ஆகஸ்ட் 15-ல் ஒட்டுமொத்த நாடும் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் காந்தி, கழிவறைகளை சுத்தம் செய்பவர்கள், ஹரிஜன், தலித் வசிக்கும் காலனியில் இருந்தார். நீங்கள் ஏன் சுதந்திரத்தைக் கொண்டாடவில்லை என அவரிடம் பலர் கேட்டனர்.
அதற்கு அவர், `பிரிட்டிஷார் வெளியேறிவிட்டனர். ஆனால், இவர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. தங்களின் சுதந்திரத்துக்காக இவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றார். ஏனெனில், நம்மிடம் பல சமூகப் பாகுபாடு, தீண்டாமை போன்றவை இருக்கின்றன. பிறகு எப்படி இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது என்று கூற முடியும்.
நிறையே பேர் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள், கழிவறைகளைச் சுத்தம் செய்கிறார்கள், ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களை நினைக்கச் சொன்னார் காந்தி. அவர்களை நினையுங்கள். உங்களின் செயல் அவர்களுக்குப் பலன் தரும்போதுதான் அது மதிப்புமிக்கது. அவர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லையென்றால் உங்களின் செயலுக்கு எந்த மதிப்பும் இல்லை” என்று கூறினார்.