நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று (2024-10-03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள், நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு விளக்கினர். சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் வெளிப்படைத்தன்மை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம், ஏற்றுமதிப் பொருட்களின் நிலை மற்றும் தரம், கைத்தொழில் முயற்சியாளர்களின் திட்டங்களுக்கு கடன் வழங்குதல், கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தொடர்ந்து வழங்குதல் மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்ற விடயங்கள் குறித்து அமைச்சு அதிகாரிகளுடன் பிரதமர் விரிவாக கலந்துரையாடினார். இதன்போது அமைச்சின் கீழ் இயங்கும் ஒவ்வொரு நிறுவனங்களையும் பற்றி தனித்தனியாகக் கேட்டறிந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நிறுவனங்களில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இலங்கையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் தனியான அதிகார சபையொன்றை தாபித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான சட்டமொன்றை உருவாக்குவதன் தேவை தொடர்பிலும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொருளாதார அபிவிருத்திக்காக கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் கூட்டாகவும் முறையான திட்டத்தின் படியும் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நிறுவனங்களுக்கு இடையே நல்ல ஒருங்கிணைப்பைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் எம்.எம். நயிமுதீன், பிரதமரின் இணைப்பு அதிகாரி தரிந்து வணிகசூரிய மற்றும் சதுரங்க அபேசிங்க, அமைச்சின் அனைத்து மேலதிக செயலாளர்கள், அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகங்கள், உயர் மட்ட அரச அதிகாரிகள், கைத்தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.