புதுடெல்லி: சீனாவிலிருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இணையதள உதவியுடன் செயல்படும் இவற்றில் சிப்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக புகார் எழுந்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புஉள்ளது. இதைத் தடுப்பதற்காக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக பரிசோதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கென ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதன் சான்றிதழ் பெற்ற பிறகே அதைப் பயன்படுத்த முடியும். இது இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
முதல்கட்டமாக இந்தகட்டுப்பாடுகள் அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்படும். அதன் பிறகு படிப்படியாக சில்லரை வர்த்தக சந்தையில் விற்கப்படும் சிசிடிவி கேமராக்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஸ்மார்ட் மீட்டர்கள், ட்ரோன் உதிரிபாகங்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட மேலும் சில சாதனங்களுக்கும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் லேட்டாப்கள், கம்ப்யூட்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் இதனால், பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில்சிலர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சீன பொருட்களை ஆய்வுசெய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.