பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியா – நியூசிலாந்து நாளை மோதல்

துபாய்,

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது . வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.’ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர்.

சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர்,லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது. இம்முறை உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.