புதுடெல்லி: ரேபிடோ, உபேர் போன்ற நிறுவனங்களின் பயன்பாடு உட்பட, வணிக ரீதியில் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், சாலை போக்குவரத்து அமைச்சகம் அவற்றை ‘ஒப்பந்த வாகன’ சட்டத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மூன்று சக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகத்தை 50 கி.மீ.ஆக வடிவமைப்பது, பள்ளிப் பேருந்து மற்றும் வேன்களுக்கு சரியான வரையறைகளை உருவாக்குவது உள்ளிட்ட 67 திருத்தங்களை மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பைக்டாக்ஸி சேவையும் ஒப்பந்த வாகன பிரிவின் கீழ் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களின் இறுதி வரைவு மசோதாவை சாலை போக்குவரத்து அமைச்சகம் அதன் வலைதளத்தில் வெளியி்ட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை அக்டோபர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாலைபோக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆறு பயணிகளுக்கும் மேல்(ஓட்டுநரை தவிர) ஏற்றிச் செல்லும்எந்தவொரு மோட்டார் வாகனம்அல்லது கல்வி நிறுவன பேருந்துகளுக்கான விதிமுறையை மறுவரை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார இருசக்கரவாகனங்களை ஓட்டும் சிறார்களால் ஏற்படும் அச்சுறுத்தலைகட்டுப்படுத்தும் வகையில் 16 வயதுநிரம்பிய ஒருவர் 50சிசி மிகா என்ஜின் திறன் அல்லது 1,500வாட்ஸ் (மின் வாகனம்)அதிகபட்ச வேக வடிவமைப்பு 25 கி.மீ.ஆக இருந்தால் அதனை ஓட்டஅனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட மசோதாவில் மாநிலங்கள் தங்களது அதிகாரஎல்லைக்குள் வரும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகபட்ச வேக வரம்பை குறைக்கும் முன் நெடுஞ்சாலை அதிகாரிகளை கலந்தாலோசிப்பது கட்டாயம் என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 100 கி.மீ., எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கி.மீ. என கார்களுக்கு வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மாநிலங்கள் கண்மூடித்தனமாக குறைக்கும்போது அது அடிக்கடி ஓட்டுநர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.