நாகர்கோவில்: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் இன்று 2வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் மேல் டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாகனங்கள் எளிதாக சென்று வருவதற்கும், மார்த்தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலும் ரூ.225 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தில் இலகு ரக வாகனங்கள், பேருந்துகள் மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் என தினமும் நூற்றுக்கணக்கானவை செல்கின்றன. அளவிற்கு அதிகமான பாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளால் பாலத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மே மாதத்தில் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் தெரிந்த நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் சீரமைக்கப்பட்டது. ஜூலை மாதம் பாலத்தின் அருகே தூண் பகுதியில் சிறிய பழுது ஏற்பட்டு கம்பிகள் விழுந்தன.
இந்நிலையில் நேற்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பழுதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே நேரம் பழுது ஏற்பட்ட பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சவப்பெட்டியை வைத்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம் நடத்தினர். இன்று 2வது நாளாக பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தமிழக, கேரள பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அடிக்கடி சேதம் ஏற்பட்டு வருவதால் மேம்பாலத்தின் உறுதி தன்மையை கண்டறிய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். பழுதடைந்த மார்த்தாண்டம் பாலத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று இரவு பார்வையிட்டு பழுதடைந்த பகுதியினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மார்த்தாண்டம் மேம்பாலம் பழுதானதும் பல கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தும் அதே வேளையில், பாலத்தில் பள்ளம் ஏற்படுவதற்கு கனிமவளம் ஏற்றி செல்லும் கனரக டாரஸ் லாரிகளே காரணம் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். அதிக பாரத்துடன் கனிமவளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு தடை விதித்தாலே, போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக அமையும் இந்த பாலத்தை அனைத்து தரப்பினராலும் பயன்படுத்த முடியும். இல்லையென்றால் இதே பழுது ஏற்படுவதை தடுக்க முடியாது. கனிமவள லாரிகள் செல்லாமல் நியாயமான போராட்டத்தை பொதுநல ஆர்வலர்கள் மேற்கொண்டால் இதற்கு தீர்வு அமையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.