மகேந்திரகர்: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் தன்வார் இன்று (அக்.3.) மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வரும் சனிக்கிழமை பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் ஹரியானாவில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் மகேந்திரகரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். ராகுல் தனது பேச்சினை முடித்ததும், தொண்டர்கள் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருக்குமாறு மேடையில் இருந்து அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் தன்வார் மேடையேறினார். அப்போது ‘இன்று அவர் (தன்வார்) மீண்டும் தனது தாய்மடிக்குத் திரும்பினார்’ என்று அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என கருதப்பட்ட அசோக் தன்வார், அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேந்திர ஹூடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில், மாநில பேரவைத் தேர்தலுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலைவரான தன்வார் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியிருப்பது கட்சிக்கு மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவில் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது.
ஹரியானா காங்கிரஸின் முன்னாள் தலைவரான தன்வார் மேடையில் ராகுல் காந்தியுடன் கை குலுக்கினார். அப்போது அவரின் முதுகில் தட்டி வாழ்த்திய பூபேந்திர ஹூடா, அவரை மீண்டும் கட்சிக்குள் வரவேற்றார். அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் உடன் இருந்தார். காங்கிரஸில் இருந்து விலகிய தன்வார் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் ஆம் ஆத்மியில் இணைந்தார். அதற்கு முன்பாக அவர் சிறிது காலம் திரிணமூல் காங்கிரஸிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.