1989 இன் டிசம்பர் குளிர்காலம் அது. குடியரசுத் தலைவர் மாளிகையில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருந்த தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
ஹரியானாவின் முன்னாள் முதல்வரான தேவி லாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவுக்கு முன்பாக ஒரு குழப்பம். அப்போதைய குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் ‘அரசியலமைப்புச் சட்டப்படி துணைப் பிரதமர் என்கிற பதவியே கிடையாது. அதனால் தேவி லாலை அமைச்சராகத்தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியுமே ஒழிய துணைப் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கமுடியாது. பதவியேற்புக்கு பிறகு அவருக்கு துணைப் பிரதமர் பதவியை கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.’ என்கிற செய்தியை தனது செயலாளர் மூலம் வி.பி.சிங்கிற்கு சொல்லியனுப்புகிறார்.

பதவியேற்பு விழாவும் தொடங்குகிறது. ‘தேவிலால் எனும் நான்…’ என நடைமுறைகள் தொடங்குகிறது. வெங்கட்ராமன் ‘மந்திரி’ எனக்குறிப்பிட்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஆனால், தேவிலால் பதிலுக்கு ‘உப பிரதான் மந்திரி (துணைப் பிரதமர்) என மொழிகிறார். வெங்கட்ராமன் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக ‘மந்திரி’ என்கிறார். தேவிலாலும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக ‘உப பிரதான் மந்திரி’ என்கிறார். தன்னுடைய செய்தி சரியாக சென்று சேரவில்லை என்பது வெங்கட்ராமனுக்கு புரிகிறது. அந்தச் சூழலில் எதுவும் அசௌகரியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவிலாலை ‘உப பிரதான் மந்திரி’ ஆகவே பதவியேற்க அனுமதிக்கிறார்.
பின்னாட்களில் இந்த சம்பவம் சர்ச்சையானது. தேவிலாலின் பதவிப் பிரமாணம் செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் கே.எம்.சர்மா என்பவர் வழக்குத் தொடுக்கிறார். நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் முன் தேவிலாலின் சார்பில் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இறங்கி வாதிடுகிறார். ‘பதவிப்பிரமாணத்தில் Descriptive – Substantial என இரண்டு பகுதிகள் இருக்கிறது. வகிக்கும் பதவி என்னவென்பதை பேசும் இடத்தில்தான் தேவிலால் துணைப் பிரதமர் என குறிப்பிட்டார். அந்தப் பதவிக்கான உறுதிமொழியையும் ரகசிய காப்புரிமையையும் வெளிப்படுத்தும் பகுதியில் அவரது பதவிப் பிரமாணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும், அவர் துணைப் பிரதமர் என்பதால் அவருக்கென்று எந்த சிறப்பு அதிகாரங்களும் கிடையாது.’ என வாதத்தை முன் வைக்கிறார். துணைப் பிரதமருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டு தேவிலாலின் பதவிப்பிரமாணத்தை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளிக்கிறார் ரங்கநாத் சர்மா.
ஆர்.வெங்கட்ராமன் எழுதிய ‘Commissions and Omissions of Indian Presidents’ என்கிற புத்தகத்திலும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டிருப்பார். ‘தொலைக்காட்சியில் நேரலையாக சென்றுகொண்டிருந்த ஒரே காரணத்துக்காக எதுவும் அசௌகரியமாக நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தேவிலாலை அவர் விருப்பப்படி பதவிப்பிரமாணம் ஏற்க அனுமதித்தேன்.’ என வெங்கட்ராமன் கூறியிருப்பார்.
இந்தாண்டு, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 10 மணி வாக்கில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் என ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவிப்பு வெளியானவுடனேயே பெரும்பாலான செய்தித் தொலைக்காட்சிகள் ‘உதயநிதி நாளை மாலை 3:30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்கிறார்.’ என செய்தி வெளியிட்டன. ‘உதயநிதி எனும் நான்..’ என ஸ்பெஷல் ஸ்டோரிக்களையெல்லாம் ஓட்டினார்கள் கட்சி காரர்கள். ஆனால், மறுநாள் கவர்னர் மாளிகையில் உதயநிதி பதவியேற்றுக் கொள்ளவே இல்லை.

புதிதாக அமைச்சரவையில் இணைந்தவர்களுக்கு மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சொல்லப்போனால் இந்த பதவிப்பிரமாண நிகழ்வுகளெல்லாம் நடப்பதற்கு முன்பே தன்னுடைய X தளத்தில் `துணை முதல்வர்’ என உதயநிதி போட்டுக் கொண்டார். அவரின் குறிஞ்சி இல்லத்திலும் துணை முதல்வர் எனக் குறிப்பிட்டு பெயர்ப்பலகை வைக்கப்பட்டு விட்டது. ஏனெனில், முந்தைய நாள் இரவிலேயே ஆளுநர் மாளிகையிலிருந்து ‘துணை முதல்வர்’ என்கிற அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இங்கேதான் வெங்கட்ராமன் – தேவிலால் சம்பவத்தை நினைவுக்கூர வேண்டியிருக்கிறது. எப்படி துணைப் பிரதமர் என பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாதோ அப்படித்தான் ஒருவரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 74(1) பிரிவுப்படி, ‘குடியரசுத் தலைவருக்கு உதவும் மற்றும் வழிகாட்டும் வகையில் பிரதமரின் தலைமையில் ஒரு அமைச்சரவைக் குழு செயல்பட வேண்டும்.’

மேலும், அமைச்சர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கும் 1952 சட்டப்பிரிவிப்படியும் பிரதமர், கேபினேட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என்கிற பதவிதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே ஒழிய துணைப் பிரதமர் என்கிற பதவி குறிப்பிடப்படவே இல்லை. இதே விஷயத்தை மாநிலங்களுக்கு என எடுத்துக் கொள்கையில் பிரதமருக்கு முதல்வர் என இட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதன்படி துணை முதல்வர் என்கிற பதவிக்கு அரசியலமைப்புச் சட்டரீதியாக எந்தவித தனிப்பட்ட அதிகாரமும் அங்கீகாரமும் கிடையாது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இனி அமைச்சர்களாகிய நாங்களெல்லாம் வேலை செய்து அவரிடம் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.” என பேசியிருந்தார். சட்டப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக மற்ற அமைச்சர்களெல்லாம் துணை முதல்வரிடம் ரிப்போர்ட் செய்யும் அளவுக்கு எந்த சிறப்பு அதிகாரமும் துணை முதல்வருக்கு கிடையவே கிடையாது. அவரும் அமைச்சர்களில் ஒருவர்தான். மற்ற அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் அவர்கள் துறைசார்ந்து இருக்கிறதோ அதே அதிகாரம்தான் துணை முதல்வர்களுக்கும்.

அரசியலமைப்புச் சட்டரீதியாக துணை முதல்வர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாவிட்டாலும் அரசியல்ரீதியாக நிறைய அதிகாரம் இருக்கிறது. இந்தியளவில் பல்வேறு மாநிலங்களில் இப்போதைக்கு 24 துணை முதல்வர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு அரசியல் காரணங்களுக்காக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்தே இதற்கான உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்போதைய முதல்வரான ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல் துணை முதல்வர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர். 2009 இல் அப்போதைய திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
அந்தக் காலக்கட்டத்தில் அரசியல்ரீதியாக திமுகவுக்கு அப்போதிருந்த தேவையையும் உணர வேண்டும். கட்சிக்குள் ஸ்டாலின், அழகிரி என இரண்டு தரப்பு இருந்தது. ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கா அழகிரிக்கு அதிக செல்வாக்கா எனும் விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. இதன் பின்னணியில்தான் மதுரையில் பத்திரிகை எரிப்புப் போன்ற சம்பவங்களும் நடந்திருந்தது. 90 வயதை நெருங்கிக் கொண்டிருந்த கருணாநிதிக்கு தனக்கு அடுத்து யார் என்பதை கட்சிக்கு அடையாளம் காட்ட வேண்டிய தேவை இருந்தது. இந்த பின்னணியையும் ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்த்தால் அதன் அரசியல் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

அதேமாதிரி, கடந்த அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதற்கும் அரசியல் மட்டும்தான் காரணமாக இருந்தது. கட்சி சில அணிகளாக உடைந்திருந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தைகளின் முடிவில் பன்னீர்செல்வம் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவுக்குள் வருகிறார். கட்சியில் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஆட்சியில் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது ஒரு மாதிரியான அரசியல் சமரசம். அதற்காக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இருவரில் ஆட்சியில் பன்னீர் செல்வத்தின் அதிகாரம் என்னவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்போது ஸ்டாலின் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்ட சமயத்தில் கட்சிக்குள் அவருக்கு இருந்த சிறிதளவு நெருக்கடி கூட இப்போது உதயநிதிக்கு இல்லை. ஆனாலும் கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் தன்னுடைய வாரிசை அடையாளம் காட்டியிருக்கிறார். வலுவான எதிர்க்கட்சி இல்லை, ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை, கட்சிக்குள்ளும் எந்த சலசலப்பும் இல்லை என்பதால் இதுதான் சரியான சமயம் என இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் வாரிசை அடையாளம் காட்டுவதற்காகவும் அரசியல் சமரசத்துக்காகவும் மட்டுமே துணை முதல்வர் பதவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஏனைய இந்தியாவில் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் துணை முதல்வர் பதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2019 தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க வை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியை பிடித்த பிறகு மெதுமெதுவாக பா.ஜ.க பக்கமாக ஒதுங்க ஆரம்பித்தார்.

தெலுங்கு தேசத்தையும் பா.ஜ.கவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்ததற்கு மிக முக்கிய இணைப்புப்புள்ளியாக செயல்பட்டது ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண். இதற்காகத்தான் தனிப்பெரும்பான்மை கிடைத்தபோதும் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு வழங்கினார். பா.ஜ.கவின் ஆதரவும் பவன் கல்யாணுக்கு வலுவாக இருப்பதை மறுக்க முடியாது. கூட்டணி கணக்குகளுக்காக துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு வழங்கப்பட்டதென புரிந்துகொள்ளலாம்.
ஆந்திரத்தில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 5 துணை முதலமைச்சர்களை நியமித்திருந்தார். இதற்கு பின்னால் சாதிய பிரதிநிதித்துவமும் சாதிய வாக்கு வங்கிகளும் காரணமாக அமைந்தது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், காபு என 5 பிரிவுகளை சேர்ந்த நபர்களை துணை முதல்வர்களாக்கினார். அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தின் மூலம் அனைத்துத்தரப்பின் செல்வாக்கையும் தன்னால் பெற முடியும் என நினைத்தார். ஆனால், அடுத்தத் தேர்தலிலேயே ஜெகன்மோகனின் YSR காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது.
1990 களிலிலிருந்தே கர்நாடகாவில் துணை முதல்வர் பதவி என்பது பிரபலம். இப்போதைய முதல்வரான சித்தராமையா கூட முன்பொரு காலத்தில் இரண்டு முறை துணை முதல்வராக இருந்திருக்கிறார். இப்போது சித்தராமையாவுக்கு கீழ் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக இருக்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த போதே முதல்வர் சித்தராமையாவா இல்லை டி.கே.சிவக்குமாரா எனும் கேள்வி எழுந்தது. இருவரும் சமபலம் வாய்ந்த தலைவர்கள்.
டி.கே.சிவக்குமார் கர்நாடகாவை தாண்டியும் கட்சிரீதியான வேலைகளுக்கு காங்கிரஸூக்கு முக்கியமானவராக இருக்கிறார். அவருக்கும் முதல்வர் பதவியின் மீது விருப்பம் இருந்தது. தனியாக கூட்டமெல்லாம் நடத்தினார். அதன்பிறகுதான் அகில இந்திய தலைமை அழைத்துப் பேசி சமரசம் செய்து டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. ஒரு உறையில் உரசிக்கொண்டிருந்த இரண்டு கத்திகளுக்காக காங்கிரஸ் கையில் எடுத்த ஆயுதம்தான் `துணை முதல்வர்’ பதவி.

துணை முதல்வர் பதவியை மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு காரணங்களுக்காக பயன்படுத்துவதில் கில்லாடி பா.ஜ.கதான். தேசியவாத காங்கிரஸையும் உடைத்துவிட்டார்கள். சிவசேனாவையும் உடைத்துவிட்டார்கள். முதல்வர் பதவியையே அங்கே அரசியல் காரணங்களுக்காகத்தான் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பா.ஜ.க கொடுத்திருக்கிறது. பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸூம் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் துணை முதல்வர்கள். முக்கியமான துறைகளை மூன்று பேருமே கூறுபோட்டு வைத்திருக்கிறார்கள். உள்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு பட்னாவிஸின் கீழ் வருகிறது. நிதித்துறை மற்றும் திட்டமிடல் துறை அஜித் பவாருக்கு. போக்குவரத்து உட்பட ஏனைய முக்கிய துறைகள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு கீழ் இரண்டு துணை முதல்வர்களை நிர்ணயிப்பதை பா.ஜ.க வழக்கமாக வைத்திருக்கிறது. ஓபிசிக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த கேசவ் பிரசாத் மௌரியாவை 2017 லிலிருந்து துணை முதல்வராக வைத்திருக்கிறார்கள். 2017-22 இல் இன்னொரு துணை முதல்வராக பிராமண சமூகத்தை சேர்ந்த தினேஷ் சர்மாவை வைத்திருந்தார்கள்.
2022 இல் ஆட்சியை பிடித்த பிறகும் கேசவ் பிரசாத் மௌரியா அப்படியே தொடர்ந்தார். இன்னொரு துணை முதல்வர் ஸ்லாட்டுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்த பிராமணரான பிரஜேஷ் பதக்கை தேர்ந்தெடுத்தார்கள். சாதியரீதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் தாங்கள் வகுக்கும் சமன்பாடுகள்தான் தங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதாக பா.ஜ.க நம்புகிறது. அதன்படிதான் ராஜஸ்தானிலும் பிராமணரான பஜன்லால் சர்மாவை முதல்வராக்கிவிட்டு ஓபிசி பிரிவை சேர்ந்த தியா குமாரியையும் தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்த பிரேம் சந்த் பைரவாவையும் துணை முதல்வராக்கியிருப்பார்கள். அவர்கள் பாணியில் இதற்கு ‘Social Engineering’ என்று பெயர்.

அரசியலமைப்புச் சட்டரீதியாக துணை முதல்வர் பதவிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லையென்றாலும் அரசியல்ரீதியாக நிறைய அதிகாரங்களையும் செய்திகளையும் உள்ளடக்கியதாகவே துணை முதல்வர்கள் பதவிகள் இருக்கிறதென்பதை மறுக்கவே முடியாது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb