புதுடெல்லி: வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த கவுடிலியா பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவின் பொருளாதார செயல்திறன் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. 10 வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, கடந்த 5 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறி இருப்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, தனிநபர் வருமானம் $2,730ஐ எட்டுவதற்கு 75 வருடங்கள் எடுத்துக் கொண்டாலும், அதில் மேலும் $2,000ஐச் சேர்க்க ஐந்து வருடங்கள் மட்டுமே தேவைப்படும். வரவிருக்கும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் உயர்ந்து நிற்கும். இது ஒரு இந்தியன் வாழ்வதற்கான காலத்தை வரையறுக்கும் சகாப்தம்.
தொடர்ச்சியான மோதல்கள், துண்டு துண்டாக பிளவுபட்டு நிற்கும் நாடுகள் என சூழல் மோசமானதாக இருந்தாலும், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, தனது தனி நபர் வருமானத்தை ஒரு சில ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முயல்கிறது. உலக அமைதிதான் செழிப்புக்கு ஆதாரம்.
வருமான சமத்துவமின்மை அளவுகோல் கிராமப்புற இந்தியாவில் 0.283 இலிருந்து 0.266 ஆகவும், நகர்ப்புறங்களில் 0.363 இலிருந்து 0.314 ஆகவும் குறைந்துள்ளது. இந்தியாவில் பொருளாதார சமத்துவம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
கடந்த பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் காரணமாகவும், கோவிட் அதிர்ச்சி மங்குவதன் காரணமாகவும் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் சிறப்பாக வெளிப்படும். இதன் காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பாடுகள் தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளைக் கடக்கும்போது, வளர்ந்த நாடுகளைப் போன்றே புதிய பண்புகளை இந்தியா கொண்டிருக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் நோக்கம், கருத்துகள், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் துடிப்பான பரிமாற்றம் காரணமாக இந்தியர்களுக்கு மட்டுமல்லாது, உலகின் பிற பகுதிகளுக்கும் இந்தியா செழிப்பை ஏற்படுத்தும்.” என தெரிவித்தார்.