தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை ரஞ்சிதா.
“அமைதியைத் தேடிய என் வாழ்க்கையில, இவ்வளவு பெரிய புயல் வீசும்னு எதிர்பார்க்கலை. வரலாற்றைத் திருப்பிப் பாருங்க. ஆண்களுக்கு எதிரான கேம்கள்ல பெண்களைத்தான் பகடையா பயன்படுத்திட்டிருக்காங்க. இப்போ நானும் அப்படித்தான்!” – அடக்க முடியாத கண்ணீருடன் 14 வருடங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதா சொன்ன வார்த்தைகள் இவை.
1990-கள்ல முன்னணி நடிகையா புகழ்பெற்ற ரஞ்சிதா, இப்போ இருக்கிற 2கே கிட்ஸூக்கும் ரொம்பவே பரிச்சயமானவங்க. நித்யானந்தாவுடனான சர்ச்சைக்குப் பிறகு, தன் குடும்பத்தை அறவே ஒதுக்கிட்டு, தனக்குப் பிடிச்ச பாதையில ரஞ்சிதா பயணப்பட ஆரம்பிச்சுட்டாங்க. ரஞ்சிதா யார்… சினிமால இவங்க சாதிச்ச விஷயங்கள்… திசைமாறிய பர்சனல் வாழ்க்கைனு இவரை பத்தின ஃப்ளாஷ்பேக் விஷயங்களைத்தான் பார்க்கப் போறோம்.
ரஞ்சிதாவின் நிஜப்பெயர் ஸ்ரீவள்ளி. இவங்க வளர்ந்தெல்லாம் பெங்களூருல. ரஞ்சிதாவின் அப்பா, சினிமா கம்பெனி ஒண்ணுல புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்வா இருந்தவர். சினிமா புன்புலம் கொண்ட குடும்பத்துல வளர்ந்த ரஞ்சிதா, விருப்பப்பட்டுதான் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தாங்களா?
“கண்டிப்பா கிடையாது! லா… இல்லைன்னா ஜர்னலிசம்… அதுவும் இல்லைன்னா ஐ.ஏ.எஸ் படிக்கணும்கிறதுதான் என் விருப்பமா இருந்துச்சு. ஆனா, என்னைத் தேடி ‘கடப்பா ரெட்டிம்மா’ங்கிற தெலுங்குப் பட வாய்ப்பு வந்தப்போ, ’ட்ரை பண்ணிப் பார்ப்போம். க்ளிக் ஆகலைன்னா படிக்கப் போயிடலாம்’னுதான் நடிக்க வந்தேன். பாரதிராஜா சார் படத்துல நடிப்பேன், அவரோட ‘ஆர்’ வரிசை ஹீரோயினா ஆவேன்னு நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை!’’ – சினிமால அறிமுகமான புதுசுல, நடிகை ரஞ்சிதா ஒரு பேட்டியில கொடுத்த விளக்கம் இது.
‘நாடோடி தென்றல்’ படத்துல ரஞ்சிதா அறிமுகமானப்போ, பாட்டிமார்கள் சொல்ற கதைகள்ல வர்ற ஓர் அப்பாவி ராஜகுமாரி மாதிரிதான் ரஞ்சிதா இருந்தாங்க. அவருடைய உயரம், கம்பீரமான ராஜகுமாரிகளுக்கானது. அவங்க முகத்துல அந்த வயசுக்கே உண்டான அப்பாவித்தனம் ரொம்பவே படர்ந்திருந்துச்சு. அதுதான், வாத்து மேய்க்கிற பூங்குருவி கேரக்டரை ரஞ்சிதாவுக்குக் வாங்கிக் கொடுத்துச்சு.
‘மணியே மணிக்குயிலே’னு ஒத்த பாட்டுல தமிழ் ரசிகர்களைக் காந்தவிசையுடன் தன் பக்கம் இழுத்தாங்க, அந்த பூங்குருவி. ரஞ்சிதாவுக்கு ஜோடி நவரச நாயகன் கார்த்திக். அந்த முதல் படத்துலயே ஜாக்கெட் போடாத கேரக்டர், நிறைய காதல் காட்சிகள், ‘சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே’ பாடல்ல உச்சக்கட்ட ரொமான்ஸ்னு ரொம்ப தைரியமா நடிச்சிருப்பார் ரஞ்சிதா. ‘நாடோடி தென்றல்’ படம் வணிக ரீதியா பெரிய வெற்றியைப் பெறலைனு சொல்லப்பட்டாலும், சினிமாத்துறையில ரஞ்சிதாவுக்கு சூப்பரான ஓபனிங் கிடைச்சது. இதுக்கப்புறமா, ரஞ்சிதா காட்டுல பட மழைதான்.
‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்துல கணவனைச் சந்தேகப்படுற மனைவி கேரக்டர்ல மிரட்டிய ரஞ்சிதா, ‘பெரிய மருது’ படத்துல கிராமத்துப் பெண்ணா தன் உயிரை விட்டு கண்கலங்க வெச்சிருப்பாங்க. ‘ஜெய்ஹிந்த்’ படத்துல ‘கண்ணா என் சேலைக்குள்ள’ பாடல்ல கவர்ச்சி டான்ஸ்ல ரசிகர்களைக் கிரங்கடிச்சு, அந்த 1994-ம் வருஷத்தோட சென்சேஷன் ஹீரோயினா பெயர் எடுத்தாங்க. அவங்களே, மறுபடியும் அர்ஜூனுடன் ‘கர்ணா’ படத்துல ‘மலரே மவுனமா’னு மெலடி சாங்ல உருகி நடிச்சிப்பாங்க.
சத்யராஜுடன் ‘அமைதிப்படை’, பிரபுவுடன் ‘சின்ன வாத்தியார்’, ரமேஷ் அரவிந்துடன் ‘பாட்டு வாத்தியார்’, மம்மூட்டியுடன் ‘மக்களாட்சி’, முரளியுடன் ‘அதர்மம்’ அப்படின்னு அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியா நடிச்சு, முன்னணி நடிகையா வலம் வந்தாங்க ரஞ்சிதா. பல படங்கள்ல மாடர்ன் அண்டு கிளாமர் ரோல்லதான் நடிச்சாங்க. கேரக்டருக்கு தகுந்தாற்போல, தான் ஏற்று நடிச்ச எல்லா ரோல்கள்லயும் ஸ்கோர் செஞ்ச ரஞ்சிதாவின் முக வசீகரம், ஹோம்லி அண்டு மாடர்ன் கேரக்டர்கள் எல்லாத்துக்குமே பக்கவா பொருந்திப்போச்சு. குறிப்பா, ரஞ்சிதாவுக்கு அமைஞ்ச பாடல்கள் பெரும்பாலானவை எல்லா தலைமுறையினருமே ஹம்மிங் பண்ற அளவுக்கு எவர்கிரீனாவே அமைஞ்சது பெரிய ப்ளஸ். ‘சொல்லிவிடு வெள்ளி நிலவே’, ‘நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்’, ‘முத்துமணி முத்துமணி’, ‘விடலப்புள்ள நேசத்துக்கு’, ‘கண்மணியே கண்மணியே’ அப்படின்னு இவங்க நடிச்ச பாடல்கள் பலவும், ரசிகர்களின் விருப்பமான ப்ளே லிஸ்ட்டா இப்பவும் ஒலிச்சுக்கிட்டிருக்கு.
ரஞ்சிதா பீக்ல இருந்த காலகட்டத்துல, அவரைப் பத்தி சினிமா பத்திரிகைகள்ல என்ன மாதிரியான துணுக்குகள் வரும் தெரியுமா? ’ஷூட்டிங் பிரேக்ல தடி தடியா புக்ஸை வெச்சி படிச்சிட்டிருப்பாங்க’னு எழுதினாங்க. ரஞ்சிதாவும் அதை உறுதிப்படுத்தியிருக்காங்க.
“என்னோடது டிபிக்கல் மிடில் கிளாஸ் ஃபேமிலி. ஸ்கூலுக்குப் போனோமா, வந்தோமான்னுதான் இருப்பேன். ரொம்ப பேச மாட்டேன். எனக்கு ஃபிரெண்ட்ஸ்கூட கிடையாது. என்.சி.சி தவிர, வேற எந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸும் நான் செஞ்சதில்ல. ஏதாவது பிரச்னை வந்தாகூட அரை மணி நேரம், ஒரு மணி நேரம்தான் ஃபீல் பண்ணுவேன். புக் படிக்க ஆரம்பிச்சா எல்லாத்தையும் மறந்திடுவேன். எவ்ளோ பிஸியா இருந்தாலும் ஒரு நாளைக்கு ரெண்டு பக்கமாவது படிக்கணும். சாப்பிடும்போதுகூட என் கையில புக் இருக்கும். அதுலேயும் ஆன்மிக புத்தகங்கள்தான் நிறைய படிப்பேன். ஆன்மிக சொற்பொழிவுகள் கேட்பேன்’’ அப்படின்னு சொல்லியிருந்தாங்க.
தமிழ் தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்லயும் ஒரு ரவுண்டு வந்த ரஞ்சிதா, சில வருஷம் சினிமால நடிக்காம, ஆளே காணாம போனாங்க. 1999-ல் தன் குருநாதர் பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ படத்துல நாயகியின் அண்ணி கேரக்டர்ல தலைகாட்டியிருந்தாங்க. அதுக்கடுத்த வருஷம், சன் டிவியில ஒளிபரப்பான ‘கிருஷ்ணதாசி’ சீரியலில்ல டைட்டில் ரோல்ல நடிச்சாங்க. இந்த சீரியல் மிகப் பெரிய ஹிட்டாச்சு. மென்மையும் வைராக்கியமும் கொண்ட அந்த கிருஷ்ணதாசி கேரக்டர்ல, தாசியாவும் டீன் ஏஜ் பொண்ணுக்கு அம்மாவாவும் துணிஞ்சு நடிச்சாங்க ரஞ்சிதா. அந்த நேரத்துலதான் ரஞ்சிதாவுக்குக் கல்யாணமாகிடுச்சுன்னு பரபரப்புச் செய்திகள் வெளியாச்சு. அதை ரஞ்சிதாவும் உறுதிப்படுத்தினார்.
“என் கணவர் பேரு ராகேஷ் மேனன். ஆர்மி ஆபீஸர். லவ் மேரேஜ்தான். அவர் ரொம்ப கூல் பர்சன். ஆபீஸ் டென்ஷன், வீட்ல சத்தம் போடுறதெல்லாம் அவர்கிட்ட கிடையாது” – பிரேக்கிங் ஸ்டேட்மென்ட்டா தன் மண வாழ்க்கை பத்தி வெளிப்படையாவும் மகிழ்ச்சியாவும் மீடியாக்கள்ல பகிர்ந்தாங்க ரஞ்சிதா. இதுக்கப்புறமா, மறுபடியும் சில வருஷங்கள் ரஞ்சிதா யார் கண்லயும் தென்படலை. கணவர், குழந்தைனு அவங்க சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கிறதாவே அந்த ‘பூங்குருவி’யின் ரசிகர்கள் நம்பிக்கிட்டிருந்தாங்க.
மீடியாக்கள்ல பெரிசா முகம் காட்டாம இருந்தாலும், அவ்வப்போது சில படங்கள்ல கேரக்டர் ரோல்கள்ல நடிச்ச ரஞ்சிதா, ‘வில்லு’ படத்துல ஹீரோ விஜய்யின் அம்மாவா ஃப்ளாஷ்பேக் காட்சிகள்ல நடிச்சிருந்தாங்க. ‘விஜய்க்கு ஜோடியா ரஞ்சிதாவா? காமினேஷனே புதுசா இருக்கே’னு ரசிகர்கள் பேசினாங்க.
இந்த இடத்துல ஸ்ரீவள்ளிங்கிய ரஞ்சிதாவோட சில அடிப்படை இயல்புகளை நாம தெரிஞ்சுக்கிறது அவசியம்.
“நான் அவ்ளோ கலகலப்பான கேரக்டர் கிடையாது. ஏதாவது டென்ஷன்னாகூட அதைச் சீக்கிரமா மறந்துடுவேன்.’’
’’எனக்குச் சமூகத்துல நடக்கிற பிரச்னைகள் பத்தி ஒரு படம் எடுக்கணும்.’’
“நிறைய நகை வேணும், பணம் வேணும்னு ஆசைப்படறவங்ககிட்ட நான் நிறைய பேச மாட்டேன். ஒதுங்கிடுவேன்.’’ – ரஞ்சிதா வெவ்வேறு தருணங்கள்ல சொல்லியிருக்கிற இந்த வார்த்தைகளை ஆராய்ந்துப் பார்த்தா, அறிவான, அதேநேரம், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற சிம்பிளான கேரக்டர்தான் இவங்கன்னு புரியும்.
இப்படிப்பட்ட கேரக்டர்தான் ஓவர் நைட்ல உலகமே விமர்சனம் செய்ற நிலைக்கு ஆளானது. ‘அந்த வீடியோவுல இருந்தது ரஞ்சிதாதான்’, ‘ரஞ்சிதா அந்த ஆசிரமத்துலதான் இருக்காங்க’, ‘ரஞ்சிதாதான் அந்த மாதிரியான மாடர்ன் பிளவுஸ் போடுவாங்க’, ‘ரஞ்சிதா அந்த நபரோட சிஷ்யைதான்…’ – இதுபோல எத்தனை எத்தனை கமெண்ட்கள்… சொல்லவே வாய்கூசும் விமர்சனங்கள்… தனியொரு பெண்ணா அத்தனையையும் தாங்கிக்கிட்டார் ரஞ்சிதா.
ஒரு பெண், அதுவும் நடிகைங்கிற பிம்பத்தால பெரும் ஏளனங்களையும் அமவானங்களையும் ரஞ்சிதா தூக்கிச் சுமக்க நேரிட்டது. சில மாதங்கள் யார் கண்லயும் படாமலே இருந்த ரஞ்சிதா, திடீர் திருப்பமா மீடியாக்கள் முன்னிலையில என்ட்ரி கொடுத்து, கண்ணீர் விட்டார்.
“என்னை ஏன் இப்படிச் செஞ்சீங்க” அப்படின்னு பத்திரிகையாளர்கள்கிட்ட கோபமும் காட்டினார். “அது நான் இல்ல… அது நான் இல்ல… அது நான் இல்லவே இல்ல…” – அந்தக் காலகட்டத்துல, ரஞ்சிதா தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருந்த வார்த்தைகள் இவைதான்.
அழுதழுது ஓய்ந்தவர், தன் மனக்குமுறல்களையெல்லாம் வீடியோ பேட்டியொன்றில் இறக்கி வெச்சவர், “என் மரியாதையை பொதுவெளியில துகிலுரிச்சுட்டாங்க’’னு மனம் வெதும்பினார்.
“என் அப்பா பெரிய பிசினஸ்மேன் இல்ல. அவருக்கு எந்த பவரும் இல்லை. நாங்க சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி. எங்கப்பாவால என்னைக் காப்பாத்த முடியலை’’
“அந்தச் சம்பவத்துக்கு அப்புறமா தற்கொலை செஞ்சுக்கலாமான்னுகூட யோசிச்சேன். அப்படிச் செஞ்சுக்கிட்டா, என் குடும்பத்தை யார் பார்த்துப்பா. அதனால, அந்த முடிவை கைவிட்டுட்டேன்’’ – கண்ணீரைக் கண்களுக்குள் கட்டுப்படுத்திக்கிட்டு, மன உறுதியுடன் அந்த வீடியோல பேசியிருப்பார் ரஞ்சிதா.
“என்ன பிரச்னை வந்தாலும் ஒரு புத்தகம் இருந்தா எல்லாத்தையும் மறந்துடுவேன்” அப்படின்னு தன் முந்தைய பேட்டியில சொன்னதைப்போலவே, வெகு சீக்கிரத்துலயே தான் சிக்கிக்கிடந்த அந்தக் கசப்பான சர்ச்சை வளையத்திலேருந்து மீண்டார் ரஞ்சிதா. அந்தப் பரபரப்பு அடங்கிறதுக்குள்ள, ‘கணவரை பிரிஞ்சுட்டீங்களா?’னு மீடியாக்கள் கேட்டதுக்கு, “ஆமாம்! எனக்கு நடந்ததையெல்லாம் அவர் எப்படித் தாங்குவார்? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லையா?” அப்படின்னு வெளிப்படையாகவே பேசினார். அந்த நிதானம்தான் ரஞ்சிதாவின் பக்குவப்பட்ட குணம்.
ரஞ்சிதாவைப் பத்தி நடிகை குட்டி பத்மினி பகிர்ந்த செய்தி, இந்த நேரத்துல நினைவுகூரத்தக்கது. “கிருஷ்ணதாசில நடிக்கிறப்போ ஒரு ரூமுக்குள்ள ரஞ்சிதா நடிக்க வேண்டிய சீன். அந்த ரூமுக்குள்ள எலிகள் இருந்திருக்கு. ரஞ்சிதாவுக்கு எலின்னா ரொம்ப பயமாம். இது எங்களுக்குத் தெரியாது. பயந்து அழுது, எலி வாடை தாங்க முடியாம வாந்தி எடுத்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க ரஞ்சிதா. ஆனா, அதுக்காக அவங்க ஷூட்டிங் கேன்சல் பண்ணல. தொடர்ந்து நடிக்கத்தான் செஞ்சாங்க. தன்னோட பயம், அலர்ஜி இதையெல்லாம் அவங்க வேலையில காட்டல”னு சொன்னார். இந்த டெடிகேஷன்தான் ரஞ்சிதா.
“ஆன்மிக புத்தகங்கள் நிறைய படிப்பேன், ஆன்மிக கேசட்டுகள் நிறைய கேட்பேன்” அப்படின்னு தன் 20 வயதுகள்லயே சொன்ன ரஞ்சிதா, இப்போ தன் 50 வயதுலயும் அதே நிலைப்பாட்டுலதான் இருக்காங்க. விமர்சனங்கள், கிண்டல்கள்னு தன்னைப் பத்தின எல்லா பேச்சுக்களுக்குமே பதிலடியா, “இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான். இனியும் அவருடன் இணைஞ்சு ஆன்மீக வழியிலதான் செயல்படுவேன்” அப்படின்னு பகீர் முடிவையும் வெளிப்படையா சொன்னார் ரஞ்சிதா.
வருஷங்கள் பல உருண்டோடிய இந்த நிலையில, இப்பவும் சர்ச்சை மெட்டீரியலா வலம் வர்ற நித்யானந்தாவின் ஆன்மிகக் குழுவுலதான் ரஞ்சிதாவும் இருக்காங்க. முன்பைவிட சோஷியல் மீடியால இப்பதான் ரஞ்சிதா ஆக்டிவ்வா இருக்காங்க. நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமரா ரஞ்சிதா இருக்கிறதா, கூகுள் தகவல் சொல்லுது. ரஞ்சிதா தேடிக்கிட்ட இந்த முடிவு சரியா, தப்பான்னு அலசி ஆராயாம, இது அவரின் தனிப்பட்ட முடிவு; தன் சுய விருப்பத்தின் பேரில் ரஞ்சிதாவே தேடிக்கிட்ட முடிவுங்கிறதை உணர்ந்து, அவர் போக்கிலேயே விட்டுடலாம். தான் செஞ்ச வினைகளுக்கான எதிர்வினைகளை எதிர்கொள்வது எல்லோருக்குமே பொதுவானதுதான். இது, ரஞ்சிதாவுக்கும் பொருந்தும்.
அதேசமயம், ‘ராவணன்’ படத்துல திடீர்னு ஒரு கேரக்டர்ல தலையைக்காட்டி சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியதுபோலவே, ரஞ்சிதா மறுபடியும் ஆன் ஸ்கிரீன்ல என்ட்ரி கொடுப்பார்ங்கிற நம்பிக்கை, எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் பலருக்கும் இன்னும் மிச்சமிருக்கு. அது நடக்குமோ நடக்காதோ… ஆனா, ‘நாடோடி தென்றல்’ ’பூங்குருவி’க்கு ரசிகர்கள் மனசுலயும், ரஞ்சிதாவுக்குத் தமிழ் சினிமா வரலாற்றுலயும் நிலையானதோர் இடம் நிச்சயம் இருக்கும், அது என்றென்றும் நிலைச்சிருக்கும்!
– நாயகிகள் வருவார்கள்!