சென்னை: ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி மீது பாஜக மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், “உலகின் மிகப் பெரிய தன்னார்வலர்கள் அமைப்பான ஆர்எஸ்எஸ் பற்றி திராவிட கழக நிர்வாகி மதிவதனி என்பவர் அவதூறாக பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேர்ந்தது. அதில், “பள்ளி கல்லூரிகள் இருக்கும் இடத்தில் போதைப் பொருள் அதிகமாக விற்கப்படுகிறது. இது ஆர்எஸ்எஸ் உடைய வெளிப்படையான திட்டம். ஏன் தன்னுடைய சொந்த மக்களை போதைக்கு அடிமைப்படுத்த சொல்கிறார்கள்? ஏனென்றால் போதைக்கு அடிமையானால் பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்” எனப் பேசியுள்ளார்.
வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன் மூலம் அவர்களை தூண்டி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், உண்மைக்குப் புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே மதிவதனி பரப்பி இருக்கிறார். மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையில், பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே, மதிவதனி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.