புதுடெல்லி: ‘‘ஊழலுக்கு மட்டுமே காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கும். எனவே நல்லாட்சி தொடர ஹரியானா மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர்நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களில் ஹரியானா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தேன். பாஜக பிரச்சார கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். ஹரியானா மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அவர்கள் காங்கிரஸின் பிரிவினைவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ஹரியானாவின் வளர்ச்சிக்காக பாஜகஅரசு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானாவில் ஊழல்களும் கலவரங்களும் அன்றாட நிகழ்வாக இருந்தன. அவற்றில் இருந்து ஹரியானாவை பாஜக மீட்டிருக்கிறது. ஊழல், சாதி பிரிவினை, வாரிசு அரசியலுக்கு மட்டுமே காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கும். ஹரியானா காங்கிரஸில் தந்தையும், மகனும் (பூபிந்தர் சிங் ஹூடா, தீபேந்திர ஹூடா) ஆதிக்கம் செலுத்துகின்றனர். இருவரும் தங்களின் சுயநலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
கர்நாடகா, இமாச்சல பிரசேத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. அந்த இரு மாநிலங்களின் மக்களும் காங்கிரஸ் ஆட்சியால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிஉள்ளனர். காங்கிரஸ் கட்சியால் ஸ்திரமான ஆட்சியை வழங்க முடியாது. ஹரியானாவை சேர்ந்தகாங்கிரஸ் தலைவர்கள், தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. டெல்லியில் ஒரு குடும்பமும் ஹரியானாவில் ஒரு குடும்பமும் காங்கிரஸை ஆட்டிபடைக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானாவில் சாதி கலவரங்கள் நடைபெற்றன. அந்த கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மக்கள் தயாராக இல்லை. மத்தியிலும் ஹரியானாவிலும் பாஜக நல்லாட்சி நடத்தி வருகிறது. ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியை பிரமிப்போடு பார்க்கின்றன. ஹரியானாவில் நல்லாட்சி தொடர பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.