கட்சியின் அனைத்து அமைப்புகளுக்கும் விரைவில் நிர்வாகிகள்- களம் இறங்கும் என்.ஆர்.காங்கிரஸ்

புதுச்சேரி: கட்சியில் அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்க என்ஆர் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் இன்று ஆலோசித்தனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ரங்கசாமி தொடங்கிய பிறகு தொகுதி வாரியாக நிர்வாகிகளோ அனைத்து அமைப்புகளுக்கு பொறுப்பாளர்களோ நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் என்ஆர் காங்கிரஸும் கட்சியை பலப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், அனைத்து அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்களைச் சேர்க்கவும் முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கைகளை என்.ஆர்.காங்கிரஸார் முன்வைத்தனர்.

இதையடுத்து நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான கூட்டம் முன்னாள் சபாநாயகர் சபாபதி தலைமையில் செயலர் ஜெயபால் முன்னிலையில் இன்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் கேஎஸ்பி ரமேஷ், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, மூத்தத் தலைவர் பக்தவத்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கட்சியை பலப்படுத்தவும், தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமித்து பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு விரைவில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் விரைவில் அனைத்து அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர். கட்சித் தொடங்கியதில் இருந்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிக்காத நிலையில் கட்சிகளில் பொறுப்பு தரவும் தற்போது முடிவு எடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்த நிலையில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.