பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பேக்கரிகளில் தயார் செய்யப்படும் கேக்குகளில் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கிழைக்கும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு மூலம் உறுதி செய்துள்ளது.
ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இந்த செயற்கை நிறமூட்டிகளை சேர்த்த பேக்கரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதெல்லாம் கொண்டாட்டம் என்றால் அதில் நிச்சயம் கேக் வெட்டுவது வழக்கம். சாக்லேட், வெனிலா, பட்டர்ஸ்காட்ச், பிளேக் மற்றும் ஒயிட் ஃபாரஸ்ட் என கேக்குகளின் பட்டியல் மிக நீளம். இந்த சூழலில்தான் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் அதில் இடம்பெற்றிருந்த அடர்த்தியான நிறங்கள்.
“ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு வகையான உணவுகளை நாங்கள் சோதனை செய்வது வழக்கம். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக கேக்குகளில் இடம்பெற்றிருந்த நிறங்களை எங்களது அதிகாரிகள் கவனித்தனர். அதன்படி பல்வேறு பேக்கரிகளில் கேக்குகளின் மாதிரிகளை சேகரித்தோம். அதை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சிலவற்றில் அல்லுரா ரெட், சன்செட் எல்லோ எப்.சி.எப் மற்றும் கார்மோசைன் உள்ளிட்ட அபாயகரமான டைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது உறுதியானது.
சம்பந்தப்பட்ட பேக்கரிகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின்படி இது குற்றமாகும். இதனை பேக்கரி உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்” என கர்நாடக உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறையினர் சேகரித்த 235 கேக் மாதிரிகளில் சுமார் 12 மாதிரிகளில் இந்த தீங்கிழைக்கும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இருப்பினும் இது பெரிய அளவில் இல்லாத காரணத்தால் மக்கள் பேக்கரிகளில் கேக் வாங்குவது குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெட் வெல்வெட், பைனாப்பிள் போன்ற கேக்குகளில் சிந்தட்டிக் டைகளை கேக் தயார் செய்பவர்கள் சேர்ப்பது வழக்கம் தான் என்றும். அதை தவிர்த்து மற்ற கேக்குகளில் அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறமூட்டிகளை சேர்ப்பார்கள் என பெங்களூரு – எலக்ட்ரானிக் சிட்டியில் பேக்கரி நடத்தி வரும் உரிமையாளர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
செயற்கை நிறமூட்டிகளை சேர்த்த உணவை தொடர்ந்து எடுத்துக் கொள்வது ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய் மற்றும் பிற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர் வந்தனா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமைன் பி’ என்று நச்சு கலந்த ரசாயனம் சேர்க்கப்பட்டிருப்பது புதுச்சேரியில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் உறுதியானது. இதையடுத்து ரோடமைன் பி கலக்கப்பட்ட உணவு பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது கேக்குகளில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.