டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்றுமுதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றுமுதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 6-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் 7-ம் தேதி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலும், 8-ம் தேதி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, ஏலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் தலா 9 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, ஆம்பூர் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டபட்டி, வாணியம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வெங்கூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.