புதுடெல்லி: தெற்கு டெல்லி மாவட்டம் ஜைத்பூரில் உள்ள நிமா என்ற தனியார் மருத்துவமனைக்குக் கடந்தசெவ்வாய்க்கிழமை 17 வயதுமதிக்கத்தக்க இருவர் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்குக் கால்விரலில் காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அடுத்தநாள் (புதன்) இரவு மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். முந்தைய நாள், கால்விரல் காயத்துக்குப் போடப்பட்ட கட்டை பிரித்து புதிதாகக் கட்டுப்போட வேண்டும் என்றுசெவிலியரிடம் கேட்டனர்.
கட்டு மாற்றப்பட்ட பிறகு மருத்துவரைச் சந்தித்து மருந்துச்சீட்டு பெற்றுக்கொள்ள அனுமதி கோரினர். இதையடுத்து உள்ளே அமர்ந்திருந்த யுனானி மருத்துவர் ஜாவெத் அக்தர் (55) அறைக்குள் இருவரும் சென்றனர். அடுத்த சிலநிமிடங்களில், மருத்துவர் அறையிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு செவிலியர்கள் உள்ளே சென்றபோது மருத்துவர் ஜாவெத் அக்தரின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையில் இரண்டு பேரும் தப்பியோடினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார் சிசிடிவி கேமராபதிவுகளின் அடிப்படையில் மருத்துவரை கொலை செய்தது அந்த இரண்டு பதின்ம வயதினர்தான் என்பதை உறுதி செய்தனர். கொலையாளிகள் சூழலை நோட்டம் விடுவதற்காகத்தான் முந்தைய இரவு சிகிச்சை பெற வந்திருக்கக்கூடும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் டெல்லி போலீஸ் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கை காப்பற்ற தவறிய டெல்லி போலீஸையும் மத்திய அரசையும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘‘டெல்லி கொலை தலைநகரமாகிவிட்டது. தாதாக்கள் சுலபமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். மிரட்டி பணம் பறிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, தினந்தோறும் கொலைகள் செய்வது போன்றவை இங்கு சகஜமாகிவிட்டது. மத்திய அரசும் டெல்லி துணைநிலை ஆளுநரும் டெல்லியில் தங்களது அடிப்படை வேலைகளை செய்யத் தவறிவிட்டனர்’’ என்றார்.
இதையடுத்து, உள்ளுறை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘‘டெல்லி நிமா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். டெல்லி போலீஸின் முதல்கட்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நாட்டின் தலைநகரில் மருத்துவர் பணியிடத்திலேயே இப்படியொரு சம்பவம் நிகழலாமா? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைத்தானே இது அப்பட்டமாக காட்டுகிறது? மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எளிதாகக் குறிவைத்துத் தாக்கப்படுவது ஏன்? பதிலளிக்கப்போவது யார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.