புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு

புதுச்சேரி: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் புதுச்சேரி முன் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. 1968ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது, தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 2021 அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை அரசு திரும்பப் பெற்றது. இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒரு நபர் கமிஷன் அமைத்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என புதுச்சேரி அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் 17ல் புதுச்சேரி அரசால் ஒரு நபர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் நியமிக்கப்பட்டார். ஆணையம் அமைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஓபிசி-க்கு உரிய இடஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க கோரப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

தற்போது இப்பணி நிலை தொடர்பாக நீதிபதி சசிதரனிடம் கேட்டதற்கு, “ஓபிசி கணக்கெடுப்புப் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். தற்போது 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். தரவுகளை சேகரிப்பதற்கான 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவது ஒரு கடினமான செயலாகும். அத்துடன் அதிக செலவினங்களை உள்ளடக்கியது, அரசின் அனுமதி கிடைத்ததும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கமிஷன் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியைத் துவங்கியது.

1,300 அங்கன்வாடி ஊழியர்களின் சேவையைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இந்த முயற்சியின் முன்னேற்றம் குறித்து அண்மையில் துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் ஆகியோரை சந்தித்து தெரிவித்தேன். தற்போது, கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பதிவேற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அது முடிவுற்ற பிறகு இடஒதுக்கீட்டிற்கான பரிந்துரையுடன் எனது அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.