நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிவசேனா-பா.ஜ.க தலைமையிலான மகாராஷ்டிரா அரசு புதுப்புது திட்டங்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. இத்திட்டங்களால் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பசுமாட்டைத் தாயாக அறிவித்தது. பசு மாட்டிற்குத் தாய் அந்தஸ்து கொடுத்ததோடு, நாட்டுப் பசு மாடுகளை இனப்பெருக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இப்போது கோசாலாக்களில் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு மகாராஷ்டிரா அரசு மானியம் அறிவித்து இருக்கிறது. ஒவ்வொரு மாட்டிற்கும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி கோசாலாக்களில் வளர்க்கப்படும் நாட்டுப் பசு மாடுகளுக்கு மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.50 மானியமாக வழங்கும். இத்திட்டத்தை அறிவிக்க மாநில நிதித்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு மாநில கால்நடைத்துறையும் ஒவ்வொரு மாட்டிற்கும் ரூ.30 மானியமாக வழங்கலாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதனைப் பரிசீலனை செய்த அமைச்சரவை, பரிந்துரைக்கப்பட்டதை விட 60 சதவீதம் அதிகரித்து ஒவ்வொரு மாட்டிற்கும் தினமும் ரூ.50 வழங்க ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் மாநில அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.230 கோடி கூடுதல் செலவு பிடிக்கும்.
இது தவிர ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கோசாலா அமைக்க ரூ.15 லட்சத்திலிருந்து, ரூ. 25 லட்சம் வரை மானியம் கொடுக்கும் கோவர்தன் கொவன்ஸ் சேவா கேந்திரா யோஜனா திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோசாலாக்களிலிருந்து கோமியம், சாணம் போன்றவற்றை வாங்கி அதில் உரம், சாண எரிவாயு போன்றவைத் தயாரிப்பதை ஊக்கப்படுத்தவும் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பசு மாடுகளுக்காக மூன்று திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் இத்திட்டத்தால் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகப் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பசுமாட்டிற்கு ரூ.20 முதல் ரூ. 40 வரை தினமும் மானியம் கொடுக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY