முதலிடங்களைப் பிடிக்கும் தமிழ்நாடு…அனைத்திலும் முன்னேற வாழ்த்துகள்!

இன்றைய சூழலில்… உலகளவிலும் சரி, உள்ளூர் அளவிலும் சரி பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவதுதான் மத்திய, மாநில அரசுகளின் நோக்கம். ஏனெனில், மக்களின் வாழ்வாதாரம், சமுதாய முன்னேற்றம் என அனைத்துமே ஒரு நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆட்சியைப் பிடிக்கவும், அதைத் தக்கவைக்கவும் வளர்ச்சியைக் கொண்டுவருவது தான் ஒரேவழி என்ற முயற்சியில் அரசியல்வாதிகளும் தீவிரமாக இருக்கின்றனர். தொழில் கொள்கைகள் வகுப்பதிலும் சரி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சரி அதிக மும்முரம் காட்டுகிறார்கள். இந்த வகையில், நம்முடைய தமிழ்நாடு, ‘ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி’ என்கிற இலக்கை நோக்கி வேகமாக நகர்கிறது. இதற்கான அத்தனை முயற்சிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றின் பலன்களும் மெள்ளத் தெரியத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

சமீபத்தில் இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், வளரும் மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது தெரிய வந்தது. தற்போது, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மற்றோர் அறிக்கையும் வெளியாகி, மகிழ்ச்சியைக் கூடுதல் ஆக்கியுள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின், ‘2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவில் தொழிற்சாலைகளின் செயல்பாடு குறித்த வருடாந்தர மதிப்பீட்டு ஆய்வறிக்கையை’ நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டது. அதில், அதிக தொழிற்சாலைகள் என்கிற வகையிலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதிலும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களையெல்லாம்விட வேகமாக முன்னேறி, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு!

இந்திய அளவில் 2022-23-ம் நிதி ஆண்டில் மொத்தம் 1.85 கோடி வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 27.74 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி முதல் இடத்தைப் பிடித்திருக்கும் தமிழ்நாடு, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யிலும் இந்திய அளவில் 15.66 சதவிகித பங்களிப்புடன் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசைப் பாராட்டியே ஆக வேண்டும். அதேசமயம், மூலதனம், உற்பத்தி மற்றும் மொத்த பொருளாதார மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றில் தமிழ்நாடு மூன்று மற்றும் நான்காம் இடங்களில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னிலையில் மகாராஷ்டிராவும் குஜராத்தும்தான் உள்ளன.

அதிக தொழிற்சாலைகள், அதிக வேலைவாய்ப்புகள் என்பவை உள்ளீட்டு ஆதாரங்களே (Resources). இவற்றை இன்னும் திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால், உற்பத்தியையும், பொருளாதார மதிப்பையும் நிச்சயமாக அதிகரிக்க முடியும். அப்போது ‘ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்கிற இலக்கை எட்டுவதோடு, நாட்டிலேயே அனைத்திலும் முன்னணி மாநிலம் என்கிற நிலையையும் எளிதாகவே தமிழ்நாடு அடையமுடியும்.

அனைத்திலும் முதலிடம் நோக்கி முன்னேற வாழ்த்துவோம்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.