இலங்கை அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் விவசாயயத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரையிலும் 2,330 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில்புரிவதற்காகச் சென்றுள்ளனர்.
இதேவேளை, விவசாயத் துறையில் தொழில்வாய்ப்புக்கு தகுதி பெற்ற மேலும் 118 இலங்கையர்களுக்கு அண்மையில் (02) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இவர்கள் ஒக்டோபர் மாதம் 9, 10, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இஸ்ரேல் நாட்டிற்குச் செல்லவுள்ளனர்.
இஸ்ரேலில் நிலவும் அமைதியின்மை காரணமாக அந்நாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கவில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாகவே, இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக வேண்டி எவருக்கும் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.