புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம்சரிவடைய முக்கிய காரணமான வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க தவறிய பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் காற்றுத்தர மேலாண்மை ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியில்லாத அளவுக்கு மாசடைந்து வருகிறது. இதற்கு வாகன பெருக்கம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பினும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் அதிக அளவில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. முக்கியமாக அடர்ந்தபனிமூட்டம் நிறைந்த குளிர்காலத்தில் மேற்கூறிய காரணங்களால் காற்றின் தரக் குறைபாடு டெல்லியில் அண்மைக்காலத்தில் அபாயகட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு கூறியதாவது: டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் நிபுணர்களை ஒருங்கிணைத்துகடந்த ஆக.29-ம் தேதி நடத்தப்பட்ட வட்ட மேசை மாநாட்டில் முக்கியஉறுப்பினர்கள் 11 பேரில் 5 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போதும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் விவாதிக்கப்படவில்லை. இதுதவிர மாநில மாசுகட்டுப்பாடு வாரியங்களில் ஊழியர்பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி இருந்தால் குளிர்காலத்தையொட்டி வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதையும் அதையொட்டிய காற்று மாசுபாடு பிரச்சினையையும் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மாசு கட்டுப்பாடு வாரியங்களில் உரிய உறுப்பினர்கள் இல்லாது போனால் அவற்றுக்குக்கீழ் செயல்பட வேண்டிய துணை ஆணையங்கள் செயலிழந்துவிடும். ஆகையால், வரும் 2025 ஏப்ரல் 30-க்குள் இங்குள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
வேளாண் கழிவு விவகாரம் தொடர்பாக காற்றுத்தர மேலாண்மை ஆணையம் இதுவரைஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை. மாசுபாடு பிரச்சினையைக் குறைக்க உரிய முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் உறுதி அளிக்கவேண்டும். நீங்கள் இதுவரை எந்தமுயற்சியும் எடுக்கவில்லை என்பது நாட்டின் தலைநகரின் காற்றில் தெரிகிறது. அடுத்த 7 நாட்களுக்குள் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவது தொடர்பாக காற்றுத்தர மேலாண்மைஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அடுத்தகட்ட விசாரணை அக். 16-ம்தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.