புதுடெல்லி: ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும்; போதையில்லா மாநிலமாக மாற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை (அக்டோபர் 5) தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “பாஜகவால் உருவாக்கப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் ஹரியானாவின் வேர்களையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் பாதுகாப்பையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இன்று இந்தியாவில் வேலையின்மை விகிதம் உள்ள மாநிலம் ஹரியானா. இதற்குக் காரணம் – கடந்த பத்தாண்டுகளில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒவ்வொரு அமைப்பின் முதுகெலும்பையும் பாஜக உடைத்துவிட்டது.
இதனால், ஏற்பட்டுள்ள போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் திறமை வீணாகிறது. விரக்தியடைந்த இளைஞர்கள் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். குடும்பங்கள் சீரழிகின்றன. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும்; போதையில்லா மாநிலமாக மாற்றப்படும். ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இந்தியாவில் 5,500 சிறு உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சரியான ஆதரவை வழங்கினால், அவர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகுக்கு சந்தைப்படுத்த முடியும். அவர்களுக்கு நிதி, தொழில்நுட்பம், நெட்வொர்க்குகள், பிராண்டிங் மற்றும் சிறந்த அமைப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான கொள்கைகள் தேவை. அனைவருக்கும் பயனளிக்கும் விரைவான பொருளாதார வளர்ச்சியும், உலக அரங்கில் போட்டியிடக்கூடிய அதிக உற்பத்திப் பொருளாதாரமும் இந்தியாவுக்குத் தேவை. பிரதமர் மோடி செய்ததைப் போல, ஒரு சில பெரு நிறுவனங்களின் மீது மட்டும் கவனம் செலுத்துவதை விட, நமது சிறு வணிகங்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
படித்த, ஆற்றல் மிக்க இளம் தலைமுறையின் விருப்பங்களை பூர்த்தி செய்யவும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், கோடிக்கணக்கான முறையான வேலைகளை உருவாக்கவும் இத்தகைய உள்ளடக்கிய வளர்ச்சி மட்டுமே ஒரே வழி. ஹரியானா மற்றும் இந்தியாவில் பொருளாதாரத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது. அவர்கள் கோடிக்கணக்கானவர்களை முறைசாரா வேலைகளுக்குள் தள்ளியுள்ளனர். சிறுதொழில்களை அழித்து லட்சக்கணக்கான மக்களை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அதானியால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளின் மீது மட்டுமே அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. ஹரியானா மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். மோடியின் கூட்டு முதலாளித்துவக் கொள்கைகளின் சக்கரவியூகத்தை உடைக்க அவர்கள் விரைவில் அடுத்த அடியை அடிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.