நம் சமையலறையில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப்பொருள் வெங்காயம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், சித்த மருத்துவர் விக்ரம் குமார் பெரிய வெங்காயத்தின் மருத்துவப்பயன்கள் பற்றி பேசவிருக்கிறார்.
ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் என்று வெங்காயத்துக்கு பல பெயர்கள் இருக்கின்றன.
வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், அதில் கந்தகச் சத்து இருப்பதுதான். இதுதான், அதன் தோலை உரிப்பவர்களை அழ வைத்து விடுகிறது.
ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவி செய்யும் வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டால், வைட்டமின் சி-யும் இன்னும் சில தாது உப்புக்களும் நம் உடலுக்குக் கிடைக்கும்.
அளவுக்கதிகமாக சாப்பிட்ட நாள்களில், கொஞ்சம் வெங்காயம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
வெங்காயத்தைப் புற்றுநோய் பரவாமல் தடுத்து நிறுத்தும் ஓர் எல்லை வீரன் என்கின்றன ஆய்வுகள். வெங்காயத்தில் உள்ள `குயிர்செடின்’ (Quercetin) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள், காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை எதுவும் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது.
ரத்தக்குழாய்களில் கொழுப்புத் திட்டுகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. உங்கள் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க, சமையலில் வெங்காயத்தை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல்சூட்டைத் தணிக்க, வெங்காயத் துண்டுகளை நெய்விட்டு வதக்கிச் சுவைக்கலாம். இதே முறையில், வெள்ளை நிற பெரிய வெங்காயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, மூலநோய் கட்டுக்குள் இருக்கும்.
சிறுநீர் எரிச்சல் ஏற்படும்போது, வெங்காயத்தை ஒன்றிரண்டாக இடித்து குடிநீரில் போட்டுப் பருகலாம்.
நீரில் வெங்காயத்தைப்போட்டு கொதிக்கவைத்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலியைத் தவிர்க்கலாம்.
ஆண்மையை அதிகரிக்க பாதாம், பிஸ்தாவைத் தேடிப்போகிறவர்கள் வெங்காயத்தைச் சாப்பிட்டாலே போதும்; அந்த அளவுக்கு இதில் வீரிய சக்தி உள்ளது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `நறுமணத் தோட்டம்’ (The perfumed garden) என்னும் அரேபிய நூலில் வெங்காயத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வீரியம் அதிகரிக்கும் என்னும் குறிப்பு காணப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு பாரம்பர்யத்தில் திருமணமான தம்பதியருக்கு `வெங்காய சூப்’ கொடுக்கும்முறை இன்றைக்கும் தொடர்கிறது.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: