நடிகர் ரஜினிகாந்த் (73), கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து ‘இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்யப்பட்டு விட்டது. ரத்தநாளத்தில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு stent பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்’ என தெரிவித்திருந்தது. ரஜினி ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு, லோகேஷின் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தது இந்தச் சம்பவம் நடந்தது.
இதையடுத்து இன்று படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்கிறது என 40 நாட்கள் முன்னாடியே ரஜினி சார் எங்களிடம் சொல்லிவிட்டார். அதன்பிறகு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர் எங்களிடம் முன்கூட்டியே எல்லாவற்றையும் சொல்லிவிட்டதால், நாங்கள் அச்சப்படவில்லை. அதனால்தான் நாங்கள் சென்னை வந்து ரஜினி சாரை நேரில் பார்க்கவில்லை.
அவர் இல்லாத காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். இல்லையென்றால், உடனே படக்குழு மொத்தமும் மருத்துவமனை வாசலில் வந்து நின்றிருப்போம். மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ‘சன் பிக்சர்ஸ்’ அவர்களும் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பார்கள். ரஜினி சார் எல்லாவற்றையும் முன்கூட்டியே எங்களிடம் சொல்லிவிட்டார்.
அதனால்தான் சென்னைக்கு வராமல் படப்பிடிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம். ஆனால், ரஜினிசார் உடல்நலம் குறித்து யூடியூப்பில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசியது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. எதோ பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல பேசினார்கள். ரஜினி சார் நலமுடன் இருக்கிறார். ஆண்டவன் அருளால் அவர் என்றும் நலமுடன் இருப்பார்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…