சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை இல்லாத 18,000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல்வேறு திட்டங்களுக்காக நிலம் எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படாததால் நிலத்தை கையகப்படுத்தவோ அதில் திட்டங்களை கொண்டுவரும் பணியோ நடக்கவில்லை. அதேநேரத்தில் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. உரிய பணமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதல்வர் அறிவுறுத்தினார். இதன்பேரில் 16 இடங்களில் புகார்பெட்டி வைக்கப்பட்டு 4,488 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள்உயர்மட்ட குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, அவை 6 வகையாக பிரிக்கப்பட்டன. இதில் ‘போர் ஓன்’நோட்டீஸ் மற்றும் 6 டி அறிவிக்கைகளை ஒன்றிணைத்து அதில் 5 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது.
இதுதவிர, குறிப்பிட்ட நிலங்களை எடுப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்படாததால், அதில் பலர் விற்று வீடுகளை கட்டிவிட்டனர். இந்த வகையில் 10 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட உள்ளது. அவற்றில் தற்போது குடியிருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே போர் ஓன் நோட்டீஸ் வழங்கப்பட்டதில் 2002.21 ஏக்கர் நிலம் விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,000 ஏக்கர் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு உள்ளது. சிலருக்கு ஆவணங்கள் சரியாக இல்லாததால் அதுவும் ஆய்வில் உள்ளது. இந்த நிலமும் திரும்பி வழங்கப்பட்டுவிடும். தற்போதுவரை 12 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஏக்கர் அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் விடுவிக்கப்படும்.
இதுதவிர நில ஆர்ஜித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கானதொகை நேரடியாக உரிமையாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பலர்பணத்தை பெறாததால் நீதிமன்றத்தில் கட்டப்பட்டோ, வருவாய் வைப்பீடாகவோ உள்ளது. ஆனால், நிலம்வாரியத்தால் எடுக்கப்படாமல் உள்ளது. அந்த இடங்களை கையகப்படுத்தினால், அங்குள்ள வீடுகளைஇடிக்க வேண்டி வரும். இதைதவிர்க்க வாரியம் அளித்த தொகை,நில மேம்பாட்டுத் தொகை ஆகியவற்றை கணக்கிட்டு மீதித் தொகையை செலுத்தி அந்தஇடத்தை குடியிருப்பாளர்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால்,அவர்கள் உரிமையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் வேண்டும்.
இதேபோல், வாரியத்தால் நிலம்முழுமையாக கையகப்படுத்தப்பட்டு, மீதமுள்ள நிலம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. அவை பின்னாளில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலம் முழுமையாக வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமானது. வேறு யாருக்கும் உரிமையில்லை. இருப்பினும், அதில் கட்டிடம் கட்டியிருந்து அதற்குரிய ஆவணங்கள் இருந்தால் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படாதவாறு அவர்களுக்கே நிலத்தை தர முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் 18 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படும்.
இந்த நிலத்தின் மீது மக்கள் கடன் பெறுவோ, தானமளிக்கவோ முடியாத நிலையில் இருந்தனர். இதற்கு ஒரே நாளில் முதல்வர் தீர்வு கண்டுள்ளார். அதேநேரம் நிலத்தின் மதிப்பு என்பது, அங்கு குடியிருப்பவர்கள் தாங்கும் அளவாக இருக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், படிப்படியாக இப்பணிகள் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே நில எடுப்பிலிருந்து 2002.21 ஏக்கர் விலக்களித்து அரசாணை வெளியிட்டதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த10 பயனாளிகள் நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.