“சத்ரபதி சிவாஜியின் சிந்தனைக்கு எதிராக பாஜகவினர் வேலை செய்கிறார்கள்” – ராகுல் காந்தி

கோலாப்பூர் (மகாராஷ்டிரா): சத்ரபதி சிவாஜியின் சிலையை பாஜகவினர் கைகளைக் கூப்பி வணங்குகிறார்கள், ஆனால் 24 மணி நேரமும் அவருடைய சிந்தனைக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அங்கு அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவின் கோலாப்பூருக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அங்கு சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், “சத்ரபதி சிவாஜியின் சிலை இன்று திறக்கப்பட்டது. ஒருவரின் சித்தாந்தத்தையும் அவரது செயல்களையும் நாம் முழு மனதுடன் ஆதரிக்கும்போது ஒரு சிலை உருவாகிறது.

சத்ரபதி சிவாஜி தன் வாழ்நாள் முழுவதும் எதற்காகப் போராடினாரோ, அந்த விஷயங்களுக்காக நாமும் போராட வேண்டும். நாடு அனைவருக்கும் சொந்தமானது, அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும், யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்ற செய்தியை சத்ரபதி சிவாஜி வழங்கினார். சிவாஜி மகாராஜின் இந்த சிந்தனையின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அனைத்தையும் அரசியல்சாசனம் உள்ளடக்கியுள்ளது.

இன்று இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சித்தாந்தம், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தவும் பாடுபடுகிறது. இது சத்ரபதி சிவாஜியின் சித்தாந்தம். இரண்டாவது சித்தாந்தம், அரசியலமைப்பை அழிப்பதில் ஈடுபட்டுள்ளது. மக்களை மிரட்டுகிறது.

அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் புதியதல்ல. சிவாஜி மகாராஜ் எந்த சித்தாந்தத்துடன் போராடினாரோ, அதே சித்தாந்தத்துடன் காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. பாஜக அமைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, சில நாட்களிலேயே உடைந்தது. சிவாஜிக்கு சிலை வைத்தால் போதாது, அவரது சித்தாந்தமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதில் உள்ள செய்தி.

பாஜகவினர் சத்ரபதி சிவாஜி சிலை முன் கைகளைக் கூப்பி வணங்குகிறார்கள். ஆனால் 24 மணி நேரமும் அவருடைய சிந்தனைக்கு எதிராக வேலை செய்கிறார்கள். சத்ரபதி சிவாஜியை நம்புகிறேன் பாஜகவினர் கூறும்போது, காங்கிரஸ் கட்சியினர் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நீங்கள் சத்ரபதி சிவாஜி சிலைக்கு முன்னால் உங்கள் கைகளை குவித்து வணங்குகிறீர்கள், ஆனால் நீங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறீர்களா? என்பதுதான் அந்த கேள்வி.

ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், சிலையின் முன் கைகளைக் குவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. சத்ரபதி சிவாஜியின் சித்தாந்தத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதே உங்களின் வேலை என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரே ஒரு செய்தியை கூறுகிறேன்.

சத்ரபதி சிவாஜி தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கு எதிராக, நீதிக்கான போரை நடத்தினார். சத்தியத்தின் பாதையைப் பின்பற்றக் கற்றுக் கொடுத்தார். அவரது வழியைப் பின்பற்றி, மக்களின் நீதிக்கான உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.