சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நாளை (அக்.6) நடைபெறுகிறது. கண்களுக்கு விருந்தாக அமைய உள்ள இந்த சாகச கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம். மேலும், இந்நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. தற்போது விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் நாளை (6-ம் தேதி) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இதை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.
குறிப்பாக, இந்த சாகச நிகழ்ச்சியில், வானில் லாகவமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக் கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்கின்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபடவுள்ளன.
மெரினா கடற்கரையில் நிகழும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பார்வையிடலாம். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஆண்டுதோறும் இந்த வான் சாகச நிகழ்ச்சி டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்தது. டெல்லிக்கு வெளியே சண்டிகரில் 2022-ம் ஆண்டும் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றது.
மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்நிகழ்வை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்புகிறது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட்டு இந்நிகழ்வை சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6,500 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மின் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, அக்.8-ம் தேதியன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, இன்று காலை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமானப்படை விமானங்கள் சாகச ஒத்திகை நடைபெற்றது. இதில் அதிநவீன ரஃபேல் விமானம் உட்பட பல போர் விமானங்கள் பங்கேற்றன. அதேபோல அணி வகுப்பு ஒத்திகையில் ஏராளமான விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை விமானப்படை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் நேரில் கண்டு ரசித்தனர்.