அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் படோக்தேவ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆட்களை ஏற்றி செல்லும் டிரக் மோதி நக்ஹட் சிங் பட்டி (50) என்பவர் உயிரிழந்தார். டிரக் ஓட்டிவந்த கோபால் சிங் பட்டி (30) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ.கோலி நேற்றுகூறியதாவது: கடந்த 2002-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் பகுதியில் கோபால் சிங்கின் தந்தை ஹரி சிங்கை டிரக் ஏற்றி நக்ஹட் சிங் பட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் நக்ஹட் மற்றும் அவரது 4 சகோதரர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஹரி சிங் கொல்லப்பட்டபோது கோபால் சிங்குக்கு 8 வயது. பின்னர் தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களைப் பற்றி அடிக்கடி உறவினர்களிடம் கேட்டு வந்துள்ளார். அப்போதில் இருந்து தந்தையை கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நக்ஹட் ஒரு குடியிருப்புப் பகுதியில் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். அந்தப் பகுதியை அடிக்கடி கோபால் நோட்டமிட்டு வந்துள்ளார். அவரது செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது இது தெரிய வந்தது. கோபால் சிங் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.