பெண்ணாக மாறுவதற்கான ஹார்மோன் தெரபிகளை செய்துவரும் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்) கோவையிலுள்ள ஒரு தனியார்ப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர்.
தன் அடையாளத்தை மறைத்து வாழும் அவர், தனக்குதானே வைத்துக்கொண்ட பெயர் பானு. இச்சூழலில் அரவிந்த்தின் தந்தை திருமணத்திற்காகப் பெண் பார்க்கத் தொடங்குகிறார். இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரத் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படையாகச் சொல்கிறார் பானு. இதை அவரின் குடும்பத்தாரும், பள்ளி நிர்வாகமும், இந்தச் சமூகமும் எப்படி எடுத்துக் கொண்டது, அரவிந்த் பானுவாக மாறும் பயணம் எப்படியிருந்தது என்பதைப் பேசுகிறது இயக்குநர் சம்யுக்தா விஜயனின் ‘நீல நிறச் சூரியன்’.
ஆணின் உடலில் இருக்கும் பெண்ணின் தவிப்பைச் சொல்லும் அரவிந்த், தயக்க மனநிலையிலே நடமாடும் பானு என இருபரிணாமங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சம்யுக்தா விஜயன். குறிப்பாகப் பெண்ணின் குரலுக்காக மெனக்கெடும் இடத்தில் ஏற்படும் விரக்தி, அன்பிற்காக ஏங்கும் இடத்தில் ஏற்படும் புறக்கணிப்பு ஆகியவற்றைக் கடத்தும் விதத்தில் நடிப்பில் மின்னுகிறார். பாலின அடையாளத்தில் குழப்பம் கொண்ட ‘நான்-பைனரி’ கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் மசந்த் ராஜன். பானுவின் தோழியாக வரும் ஹரிதா, ஆக்ஷன் கட்டுக்கு இடையே சம்பிரதாயமாக வந்துபோன உணர்வு. மற்றபடி, திருநர் பிரச்னைக்கு ஆதரவாக நிற்கும் பெண்ணாக அவரின் கதாபாத்திரம் சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு காட்சிக்கு மட்டுமே வந்தாலும் கிளோஸப் வைத்துப் பேசக்கூடிய வசனத்தை அட்டகாசமாக நடித்திருக்கிறார் கிட்டி கிருஷ்ணமூர்த்தி. அம்மாவாக கீதா கைலாசம் அழுகின்ற இடத்தில் சற்றே மிகை நடிப்பு எட்டிப்பார்க்கிறது. அதேபோல தனது மகனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் கஜராஜின் நடிப்பு நிறைவான உணர்வைத் தர மறுக்கிறது. ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா மற்றும் பிற துணை நடிகர்கள் கொடுத்த பாத்திரங்களைக் கச்சிதமாகச் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்று மூன்று பொறுப்புகளைக் கையாண்டிருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின். அதில் ஒளிப்பதிவு காட்சிகளின் மதிப்பை அதிகரித்திருந்தாலும், படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாகக் கிட்டி பேசுகிற முக்கியமான வசனக்காட்சியில் படத்தொகுப்பு படு செயற்கைத்தனம். ஒரு கலைப்படத்துக்கான பொறுமையும் இல்லாமல் கமர்ஷியல் படத்துக்கான அணுகுமுறையும் இல்லாமல் திரைமொழி தடுமாறியிருக்கிறது. இசையைப் பொறுத்தவரைப் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்காவிட்டாலும், பின்னணி இசை கதைக்கான அழுத்தத்தைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறது.
அரவிந்த் மற்றும் பானுவாக இருபாத்திரங்களை ஏற்று எழுதி, இயக்கி நடித்திருக்கிறார் சம்யுக்தா விஜயன். படத்தின் ஆரம்பப் புள்ளியில் வார்த்தைகளில் தொடங்காமல் ‘ஹும்ம்ம்ம்ம்ம்’ என்கிற ஒலியிலே கதைசொல்லலைத் தொடங்கிவிடுகிறார். திரைக்கதையாகக் காட்சிகள் விரிகிற இடத்தில் திருநங்கைகளின் நுட்பமான பிரச்னைகளைக் கழிவிரக்கம் கோராமல் நிதானமாக நகர்த்தியிருக்கிறார். குறிப்பாகத் தன்னைக் குடும்பத்தில் பெண் என்று அடையாளப்படுத்திக் கொள்கிற இடம், கழிவறைக்கான போராட்டம், தன்னை உடலாக மட்டுமே பாவிக்கிற ஆணின் மனநிலை ஆகிய இடங்களில் பானுவின் மனநிலையிலிருந்தே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் வீரியம் ஏனோ காட்சிகளில் முழுமையாகக் கடத்தப்படவில்லை.
பானுவின் புற, அக உலகத்தைப் பற்றிப் பேசிய அளவுக்கு, கார்த்திக் (மசாந்த்) என்ற ‘குயர்’ மாணவரைப் பற்றிய பயணத்தை அதிகமாக விவரிக்கவில்லை. ‘குயர்’ என்கிற பதமே பொது சமுகத்தில் பரவலாகப் புரிதல் இல்லாத போக்கு நிலவும் பட்சத்தில், அதனை இன்னும் பொறுப்புடன் தெளிவாக விளக்கியிருக்கலாம். இரண்டாம் பாதியில் திரைக்கதை வடிவமைக்கப்பட்ட விதமும் நம்மைப் படத்தை விட்டு விலக வைக்கின்றன.
ஒரு காட்சியில் குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்மணி, பானுவை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அதைப் பானு மறுத்தவுடன் அந்தப் பெண் குழப்பத்துடன் பார்க்கிறார். திருநங்கைகள் குறித்த பொதுச் சமூகப் பார்வையை மாற்ற முயன்றிருக்கும் அந்தக் காட்சிக்குப் பாராட்டுகள். ஆனால், ஒரு தனிநபரின் சற்றே மேம்பட்ட வாழ்வை மட்டுமே சித்திரித்திருக்கும் இந்தப் படைப்பு, ஒட்டுமொத்த திருநர்களின் வாழ்வாதார சிரமங்களை ஆராய்வதில் தள்ளியே நிற்கின்றது.
உதாரணமாக, தன்னை ‘திருநங்கை’ என்றில்லாமல் ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தவேண்டும் என்று கோருவது ஒருவரின் உரிமை என்றாலும், ‘திருநங்கை’ என்ற சொற்பதம், அவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை அறிந்திடாமல் அதை ஒதுக்கும் மனநிலை அந்தக் காட்சியில் வெளிப்படுவது நெருடல். மேலும் ஒருவித நம்பிக்கையை அளிக்காமல் கேள்விக்குறியாக முடிக்கப்படுகிற கார்த்திக்கின் நிலைமையும் சற்றே ஏமாற்றம்தான்.
பானு வாழ்வின் நம்பிக்கைகளையும், பல கையறு நிலைகளையும் கண்ணாடி போலப் பிரதிபலிக்கும் இந்த ‘நீல நிறச் சூரியன்’, மேம்பட்ட திரைமொழியுடன் சொல்ல வந்த கருத்தைக் கூடுதல் தெளிவுடன் சொல்லியிருந்தால் இன்னும் அதிகமாகப் பிரகாசித்திருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…