நெல்லை: `என் மனைவி டி.ஆர்.ஓ, எந்த வேலையா இருந்தாலும்…' – பண மோசடி வழக்கில் பெண்ணுடன் கைதான காவலர்

தலைமைக் காவலராக பணியாற்றிய முருகராஜ் என்பவர் தனக்கு அறிமுகமான வளர்மதி என்பவரை டி.ஆர்.ஓ என போலியாக கூறி மோசடி செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ் (41). அவர் நெல்லை மாநகர காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். ஏற்கெனவே திருமணமான அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம, ஓசூரை சேர்ந்த வளர்மதி (40) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெல்லை புறநகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட முருகராஜ் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். அதனால் வளர்மதியை தனது மனைவி என்றும் அவர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருவதாக பொய் சொல்லியுள்ளார். அரசு வேலை வாங்கிக் கொடுப்பது, பட்டா மாறுதல் உள்ளிட்ட வேலைகளை தனது மனைவியால் செய்து கொடுக்க முடியும் எனத் தெரிவித்து பலரையும் நம்ப வைத்து பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சசிகுமார் என்பவருக்கு பட்டா மாறுதல் கிடைப்பதில் சிக்கல் இருந்துள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா போட முடியாமல் தவித்துவந்த அவருக்கு முருகராஜ்-வளர்மதி தம்பதி குறித்து தெரியவந்துள்ளது. அவர்கள் எந்த அரசு வேலையாக இருந்தாலும் உடனடியாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள் என சிலர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதனால் அரசு நிலத்தை தன் பெயருக்கு பட்டா போடும் முயற்சியில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபரான சசிகுமார், தலைமைக் காவலர் முருகராஜை நேரில் சந்தித்துள்ளார்.

அவருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிய முருகராஜ், தனது மனைவி வளர்மதி டி.ஆர்.ஓ என்பதால் அவரால் சுலபமாக பட்டா கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். அதற்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வாங்கியுள்ளார். ஆனால் பேசியபடி பட்டா கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த சசிகுமார், தனது பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அவரது நெருக்கடியைச் சமாளிப்பதற்காக 10 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்திருக்கிறார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகுமார் பணத்தைத் திருப்பிக் கேட்டும் முருகராஜ் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். அதனால் அவர் மீது, அவர் பணிபுரிந்த நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சசிகுமார் புகார் அளித்தார். அதை விசாரித்த போலீஸார், முதல்கட்டமாக முருகராஜ் சந்திப்பு காவல் நிலையத்தில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். தொடர் விசாரணையில் வளர்மதி எந்த அரசுப் பணியிலும் இருக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவர் டி.ஆர்.ஓ-வாக பணியாற்றுவதாக மோசடி செய்து இருவரும் சேர்ந்து பலரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சந்திப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் இருவர் மீதும் மோசடி புகார் பதிவு செய்து கைது செய்தார். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமைக் காவலர் முருகராஜ், போலி அதிகாரியாக நடித்த வளர்மதி ஆகிய இருவரும் சேர்ந்து பலரிடம் இது போல மோசடி செய்திருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அதனால் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.