பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79,000 அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து 15 மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழுவின் வாயிலாக குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கொட்டாமல் பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது ரூபாய் 79 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதைக் கண்காணித்திட ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்புக் குழு அமைத்து, 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெருங்குடி மண்டலம், வார்டு 184ல் காலிமனையில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலத்திலும் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவர்களுக்கு ரூபாய் 79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் வகையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் குப்பைகள் கொட்டுதல், கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு இடம் நிர்ணயிக்கப்பட்டும், திடக்கழிவு மேலாண்மப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவி செயற் பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் பொது இடங்கள், சாலைகள், காலி மனைகள், நீர் நிலைகளில் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவவும் கண்காணிப்பு நடவடிக்கைக்காகவும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் என 15 ரோந்து வாகனங்கள் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்புக் குழுவினர் ரோந்து வாகனத்தில் தினசரி சென்று நியமிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு வட்டாரத்தில் பெருங்குடி மண்டலம் வார்டு 184ல் உள்ள காமராஜர் நகரில் 6 ஆவது குறுக்குத் தெருவில், கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏற்றிச் சென்ற நான்கு சக்கர வாகனம் காலி மனை ஒன்றில் கொட்டும் போது கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து 15 மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழுவின் வாயிலாக குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கொட்டாமல் பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது ரூபாய் 79 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பெருநகர சென்னை மாநகராட்சியில் நீர்நிலைகள், காலி மனைகள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதைத் தவிர்த்து தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கும் பொதுமக்கள் நல் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.