ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

திருமலை: திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு நேற்றிரவு காணிக்கையாக வழங்கினார். மேலும், சுவாமியை தரிசித்து, 2025-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள், டைரிக்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு நடந்த பெரிய சேஷ வாகன சேவையிலும் அவர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். இந்நிலையில், இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

மாட வீதிகளில் அவர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் திருமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் வாகன சேவையை கண்டு களித்தனர். இதில் 16 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. இன்று இரவு அன்ன வாகனத்தில் உற்சவர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

ரூ.13.45 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன சமையல் கூடம்: திருமலை பாஞ்ச சன்யம் விடுதி அருகே திருப்பதி தேவஸ்தானம் ரூ.13.45 கோடி செலவில் மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை கட்டியது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

இதில் ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியமள ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் கார் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று, அங்கிருந்து விஜயவாடாவிற்கு விமானம் மூலம் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.