புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாய்ச்சலுடன் புதுத்தெம்பு பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த ஆண்டினை சிறப்பாக நிறைவு செய்யும் எனத் தெரிகிறது. ஹரியானாவில் 10 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஜம்மு காஷ்மீரிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 55 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நான்கு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய எல்லை நிர்ணயத்துக்கு பின்பு ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி 43 இடங்களைப் பிடிக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் 3 குறைவாக இருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரை ஹரியானாவில் 24 இடங்களிலும், ஜம்மு காஷ்மீரில் 26 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. துருவ் ரிசர்ச் மற்றும் பிப்புள்ஸ் பல்ஸ் ஆகிய இரண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மட்டும் ஹரியானாவில் பாஜக அதிகபட்சமாக 32 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளன.
ஹரியானாவில் அபய் சவுதாலாவின் இந்தியன் நேஷனல் லோக் தல் கட்சி 3 இடங்களிலும், பாஜகவின் முன்னாள் கூட்டாளியான ஜெஜெபி கட்சி ஒரு இடத்தைக் கைபற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹரியானாவின் அண்டை மாநிலங்களான டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும், இங்கு அக்கட்சியால் தனது கணக்கைத் தொடங்க முடியாது என்றே கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பத்தாண்டுகளுக்கு பின்பு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில், அங்கு தொங்கு அரசு அமையும் என்ற நிலையே உள்ளது. காங்கிரஸ் – என்சிபி கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றும் என்று மூன்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக 26 இடங்களையே வெல்லும். இது ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு பாஜகவின் முன்னாள் கூட்டாளியான மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 8 இடங்களில் வெல்லும் என்றும், அவர் இந்த முறை ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக திகழ வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- ஹரியானா கருத்துக்கணிப்பு முடிவுகள்:
- டைனிக் பாஸ்கர்: பாஜக 19-29 இடங்கள், காங்கிரஸ் 44-54 இடங்கள்
- துருவ் ரிசர்ச்: பாஜக 22-32, காங்கிரஸ் 50-64
- இண்டியா டூடே – சி வோட்டர்: பாஜக 20-28, காங்கிரஸ் 50-58
- ஜிஸ்ட் – டிஃப் ரிசர்ச்: பாஜக 29-37, காங்கிரஸ் 45-53
- பீப்புள்ஸ் ப்ளஸ்: பாஜக 20-32, காங்கிரஸ் 49-61
- ரிபப்ளிக் பாரத் – மட்ரீஸ்: பாஜக 18-24, காங்கிரஸ் 55-62
- ரிபப்ளிக் டிவி – பி-மார்க்: பாஜக 27-35, காங்கிரஸ் 51-61
மொத்தம் 90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்.18,. 25, அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
- ஜம்மு காஷ்மீர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
- ஆக்ஸிஸ் மை இந்தியா: பாஜக 24- 34, காங்.+என்சிபி 35-45, பிடிபி 4-6
- தைனிக் பாஸ்கர்: பாஜக 20-25, காங்.+ என்சிபி 35-40, பிடிபி 4-7
- இண்டியா டுடே சி-வோட்டர்: பாஜக 2 -32, காங்.+என்சிபி 40-48, பிடிபி 6-12
- பிப்புள்ஸ் ப்ளஸ்: பாஜக 23-27, காங்.+என்சிபி 46-50, பிடிபி, 7-11
90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவுக்கு சனிக்கிழமிஅ வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அக்.8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தலா 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.