2024 உலக ஆசிரியர் தினத்திற்கு பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

2024 ஒக்டோபர் 5 அன்று அனுஷ்டிக்கப்படும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “Valuing teachers voices :towards a new social contracts for education ” என்ற கருப்பொருளில் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எதிர்கால உலகை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் இத்தகைய பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும்.

வளமான தேசம் மற்றும் அழகிய வாழ்க்கை என்ற எமது இந்தப் பயணத்தில் முன்னணிப் பங்கு வகிக்கின்றவர்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள்தான் அந்த எதிர்கால உலகை உருவாக்குவதற்கான நேரடிப் பங்களிப்பை வழங்குகின்றார்கள்.

 

அறிவும், பண்பாடும், திறமையும் கொண்ட மாணவர் தலைமுறையை எதிர்காலத்திற்கு வழங்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்று நான் உணர்கிறேன். இலங்கை மாணவர் சமூகத்திற்கு கலாச்சாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் நிறைவேற்றும் பணிகள் தொடர்பில் உண்மையிலேயே திருப்திகரமான ஆசிரிய வகிபாகத்தின் தேவையை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

 

இதுவரையான பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆசிரியர்களும், அதிபர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் திருப்தியற்ற நிலைமைகளின் கீழ் பணியாற்றுகின்றமை நாம் அறியாததன்று. கல்வி அழுத்தம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் போதுமான ஊதியம் கிடைக்காமல் ஆசிரியர்கள், அதிபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆசிரியர் சேவையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், திறமையான புதியவர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வரும் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்து வருகிறது. இத்தகைய வீழ்ச்சி நிலைமைகளால் பாதிக்கப்படுவது மாணவர்களும் ஒட்டுமொத்தக் கல்வி முறையுமே ஆகும்.

 

எனவே, திருப்தியான ஆசிரியரை உருவாக்குவது எங்கள் முன்னுரிமைப் பணியாகும். ஒரு நாளுக்கு என்று மட்டுப்படுத்தப்பட்ட இந்தக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், ஆசிரியருக்கு அளிக்க முடியுமான அதிகபட்ச கௌரவத்தினையும் பாராட்டினையும் வழங்கும் கல்வி முறையைக் கட்டியெழுப்பி, அறிவு, உளப்பாங்கு, திறமைகள் நிறைந்த ஆசிரியர்களை உருவாக்கி, ஆசிரியரின் வாழ்க்கைத் தரத்தை சமூகத்தில் உயர்த்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, ஒரு நாடு என்ற ரீதியிலும், கல்வி அமைச்சர் என்ற ரீதியிலும், பிரதமர் என்ற ரீதியிலும், எமது ஆட்சிக் காலத்தில் அதனை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவோம் என இலங்கை ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் நான் உறுதியளிப்பதுடன், இன்றைய தினம் உலக ஆசிரியர் தினத்தையும், ஒக்டோபர் ஆறாம் திகதி இலங்கையில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும், இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எமது அரசாங்கத்தின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.