டுர்ர்…டுர்ர்…
சென்னையில் மதிய நேரங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் கேட்கப்படுகின்றது இந்த சத்தம். முதல் நாள் இந்த சத்தம் கேட்டப்போது…’என்ன இது?’ என்று பயந்துப்போய் வெளியே சென்று பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.
ஜெட் விமானங்கள் மாறி மாறி அங்கு இங்கு என பறக்கின்றன. பறக்கும்போது வானவேடிக்கை மாதிரி புகைகள் வானில் படர்கின்றன. பார்க்கவே கொள்ளை அழகாக இருந்தது. அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தான் சென்னை மக்களுக்கு புரிய வந்தது…அது சென்னையில் நடக்கப்போகும் விமான சாகச நிகழ்ச்சியின் ஒத்திகை என்பது.
ஆம்…சென்னையில் ஞாயிறு காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மெரினா பீச்சில் விமானப்படை சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் கலந்துக்கொண்டு கலக்க உள்ளது. மேலும் 15 லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானங்களும், தமிழ்நாட்டை சேர்ந்த கேப்டன்கள் கலந்துக்கொள்வது கூடுதல் சிறப்பு.
சாதனை முயற்சி!
ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டினால், ‘அதிக மக்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி’ என்கிற பெயரில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடிக்கலாம்.
ஏன் இந்த நிகழ்ச்சி?
இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். ஆனால் 2022-ம் ஆண்டு முதன்முதலாக டெல்லிக்கு வெளியே சண்டிகரில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன்முதலாக தென்னிந்தியாவில் அதுவும் சென்னையில் நடக்க உள்ளது. இதுவரை நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கும், இந்த ஆண்டு சென்னையில் நடக்கும் சாகச நிகழ்ச்சிக்கும் சற்று வித்தியாசம் உள்ளது.
அதாவது, இதுவரை நடந்த சாகச நிகழ்ச்சிகளில் விமானங்கள் ஒரு திசையில் தான் பயணிக்கும். ஆனால் நாளை நடக்கப்போகும் நிகழ்ச்சியில் வலது, இடது மற்றும் முன் திசைகளின் விமானங்கள் சீறி பாய உள்ளது.
ஜாலியா பார்த்து மகிழ வாங்க மக்களே!