நடிகர் அஜித் குமார் பைக் ரைட் சென்ற சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், ‘மதமும் சாதியும் வெறுப்பை உண்டாக்கும். பயணமே அன்பை விதைக்கும்.’ என பேசியிருக்கிறார்.
நடிகர் அஜித் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டத்தை கொண்ட பிரபலமான நடிகராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் கார் மற்றும் பைக்குகளின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். ஏற்கெனவே, கார் ரேஸிலெல்லாம் கலந்து கொண்டிருக்கிறார். சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அடுத்த ஆண்டில் கார் ரேஸில் பங்கேற்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அதேமாதிரி, பல்வேறு நாடுகளுக்கும் பைக்கிலேயே ரைட் செல்வதும் அஜித்துக்கு பிடித்தமான விஷயம். பைக்கில் உலகை சுற்றி வருவதை ஊக்குவிக்கும் வகையில் வீனஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை கூட அஜித் தொடங்கியிருந்தார். இந்நிலையில்தான், நீண்ட பைக் பயணத்தின் இடையே அவர் பேசியிருக்கும் ஒரு வீடியோ இப்போது இணையத்தில் சுற்றி வருகிறது.
அதில் அஜித் பேசியிருப்பதாவது, ‘நீங்கள் அதிகம் பயணம் செய்யுங்கள் என்பதுதான் என்னுடய அட்வைஸ். பயணத்தை விட சிறந்த கல்வி இருக்கவே முடியாது.
மதமானது நாம் இதற்கு முன் சந்தித்திடாத மனிதர்களை கூட வெறுக்க செய்யும் என ஒரு கூற்று உண்டு. மதம் என்றில்லை. சாதியும் அப்படித்தான். அந்த கூற்று ரொம்பவே உண்மையானது. சாதி, மதம் போன்றவற்றால் நாம் ஒரு மனிதரை சந்திப்பதற்கு முன்பாகவே அவர் இப்படித்தான் என ஒரு தீர்ப்பை எழுதிவிடுகிறோம்.
ஆனால், நீங்கள் பயணங்களை மேற்கொண்டு வெவ்வேறு தேசங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்களுடன் பழகி அவர்களின் கலாசாரத்தை அனுபவிக்கும்போது அது உங்களை கனிவானவாக மாற்றும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மீதும் அதிக அன்பைப் பொழியச் செய்யும். பயணங்கள் உங்களை மென்மேலும் சிறந்த மனிதனாக மாற்றும்.’ என்றார்.
பயணங்களின் உன்னதத்தை பற்றி அஜித் பேசியிருக்கும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகிறது. அஜித் பேசியிருப்பதை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…