மகாராஷ்டிராவில் உள்ள தன்கர் இன மக்களை மாநில அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து எஸ்.டி சாதிச்சான்றிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“மாநில அரசு பழங்குடியின பிரிவில் அரசு வேலையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப மறுத்து வருகிறது. அரசு வேலையில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை எஸ்.டி வாலிபர்களை கொண்டு நிரப்ப வேண்டும், தன்கர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாநில துணை சபாநாயகர் நர்கரி ஜரிவால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதோடு இது தொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டதற்கு முதல்வர் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் துணை சபாநாயகர் நர்கரி ஆகியோர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். கீழே ஏற்கனவே தடுப்பு வலை கட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் மாடியில் இருந்து சிலர் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். எனவே அதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை செயலகத்தில் முதல் மாடியில் தடுப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.க்களும் இத்தடுப்பு வலையில் குதித்தனர். அவர்களுடன் சேர்ந்து எம்.பி ஹேமந்த் சாவ்ராவும் குதித்தார். அவர்களை போலீஸார் உடனே பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் பின்னர் தலைமை செயலகத்தில் நின்று கொண்டு போராட்டம் நடத்தினர். துணை சபாநாயகரே இது போன்று செய்திருப்பது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த், “துணை சபாநாயகர் போன்ற பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்ற காரியத்தில் ஈடுபடக்கூடாது” என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அமைச்சர் கிரிஷ் மகாஜன் ஆகியோர் சந்தித்து பேசினர். இதில் அரசுப் பணியில் காலியாக இருக்கும் பழங்குடியினருக்கான இடங்கள் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…