மும்பை செம்பூர் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியில் உள்ள கடை ஒன்றில் இன்று காலையில் தீப்பிடித்துக்கொண்டது. தீ மளமளவென்று கடையின் மேல் பகுதியில் இருந்த வீட்டிற்கும் பரவியது. அந்நேரம் வீட்டில் உள்ளவர்கள் உறக்கத்தில் இருந்தனர். அதனால் அவர்களால் தப்பித்து ஓட முடியவில்லை. தீ விபத்து குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதோடு அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட இடம் குறுகலான பகுதியில் இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே விரைவாக சென்று தீயை அணைக்க முடியவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மாநகராட்சி உதவி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் உடல் கருகி இறந்துவிட்டனர். இறந்தவர்களில் 6 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்ட மூன்று பேரும் அடங்கும். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கீழே இருக்கும் கடையில் மின் கசிவு ஏற்பட்டு இத்தீவிபத்து நடந்திருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.