சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும் என்று தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் (டிஆர்இயு) பொதுச்செயலாளர் வி.ஹரிலால் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை ரயில்வே ஊழியர்கள் போனஸாக பெறுகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. போனஸ் என்பது கொடுக்கப்படாத சம்பளம். எனவே, உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் தான் போனஸ் வழங்க வேண்டும். ஆனால், அப்படி வழங்கப்பட வில்லை.
ரயில்வேயில் குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம். இதன் அடிப்படையில், 78 நாள் போனஸ் என்றால் உண்மையிலேயே ஒரு ஊழியர் குறைந்தபடசம் ரூ.46,159 போனஸாக பெற்றிருக்க வேண்டும். அதற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் , அதற்கேற்ப கூடுதல் தொகையை போனஸாக பெற வேண்டும். ஆனால், அப்படி உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுவதில்லை.
ஒரு ஊழியர் எவ்வளவு ஊதியம் வாங்கினாலும் போனஸுக்காக கணக்கிடும்போது, அவரது ஊதியம் ரூ. 7 ஆயிரமாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் போனஸ் உச்சவரம்பு என்கிறோம். அனைத்து ரயில்வே ஊழியர்களும் பெறும் அதிகபட்ச போனஸ் தொகை ரூ.17, 951 ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக இதே தொகையைத்தான் போனஸாக பெற்று வருகின்றனர்.
ரயில்வேயில் வழங்கப்படுவது உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ். உற்பத்தி திறன் அதிகரிக்க அதிகரிக்க போனஸ் நாட்கள் அதிகரிக்க வேண்டும். 2010-11ம் நிதியாண்டில் 921 மில்லியன் டன்னாக இருந்த சரக்கு போக்குவரத்து 2023-24-ம் நிதியாண்டில் 1,588 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. பயணிகள் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு 673 கோடி பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.
ஒட்டுமொத்த ரயில்வே வருவாயில் பெரும்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த 14 ஆண்டுகளாக எந்த உயர்வும் இன்றி அதே 78 நாட்கள் போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் கணக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க வேண்டும். உற்பத்தித் திறனுக்கு ஏற்ப போனஸ் நாட்கள் கணக்கிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.