புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் தலித் ஆதரவு கட்சியாக வளர்ந்து வருவது லோக் ஜனசக்தி (எல்ஜேபி). இக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், மத்திய உணவுத் துறைஅமைச்சராக உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினரான பஸ்வான், உ.பி. தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
உ.பி.யின் தலித்துகளில் முக்கியபிரிவான ‘பாஸி’ சமூகத்தினரின் ஆதரவு தமக்கு உள்ளதாக சிராக்பஸ்வான் நம்பிக்கை தெரிவிக்கிறார். இதனால், பாஸி உள்ளிட்டதலித் சமூகத்தினரின் வாக்குகளைபெற்று வரும் சமாஜ்வாதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் தலித் ஆதரவு கட்சியான முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளது. இவருக்கு சமீப காலமாக தலித்துகளின் செல்வாக்கு குறைந்து, பாஜகபக்கம் சாய்ந்திருந்தது. இதுவும்களம் மாறி கடந்த மக்களவைதேர்தலில் சமாஜ்வாதிக்கு தலித்வாக்குகள் கணிசமாகக் கிடைத்தன.இதனால், உத்தர பிரதேசத்தின்17 தனித்தொகுதிகளில் பாஜகவுக்கு8 மட்டும் கிடைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு தனித்தொகுதிகளில் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. மீதம் உள்ள 9 தொகுதிகளில் பெரும்பாலான இடங்கள் சமாஜ்வாதிக்கு கிடைத்தன. மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வதுமுறையாக வெற்றி பெற்று பாஜகஆட்சி அமைத்துள்ளது. அதற்கு 2014, 2019 மக்களவை தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் பெரும்பாலானவை கிடைத்ததே காரணம்.
ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் உ.பி.யில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 மற்றும் சுயேச்சை ஒரு தொகுதிகளை பெற்றன. சமாஜ்வாதியின் இந்த வெற்றி 2027 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சாதகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமாஜ்வாதியின் வாக்குகளை பிரிக்கவே எல்ஜேபி உ.பி. தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்த ஆதரவை உறுதி செய்யும்பொருட்டு உ.பி.யில் வரவிருக்கும் 10 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் எல்ஜேபி போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன.
இதேபோல், பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. இதன் தலைவர் முதல்வர் நிதிஷ்குமாரின் குர்மி சமூக ஆதரவு அக்கட்சிக்கு உ.பி.யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.