சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் கடும் விமர்சனத்தை தொடர்ந்து கழிப்பறை வரி உத்தரவை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மாநில ஜல்சக்தி துறை வெளியிட்ட அறிவிக்கையில், “அக்டோபர் 1-ம் தேதிமுதல் நகர்ப்புறங்களில் சொந்தமாக தண்ணீர் வசதி இருந்து, ஜல்சக்தி துறையின் சாக்கடை வசதியை பயன்படுத்தும் அனைத்துகுடும்பங்களுக்கும் கழிப்பறைக்கு தலா ரூ.25 வீதம் வரி வசூலிக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ‘எக்ஸ்’ பதிவில், “நம்பமுடியவில்லை, ஆனால் உண்மை. தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் இயக்கமாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றிவரும் வேளையில், கழிப்பறைகளுக்கு காங்கிரஸ் அரசு வரி விதிப்பது வெட்ககேடானது.
தங்கள் ஆட்சியில் நல்ல சுகாதார வசதியை அவர்களால் வழங்க முடியவில்லை. அவர்களின் இந்த நடவடிக்கை நாட்டை அவமானப்படுத்தும்” என்று கூறியிருந்தார்.
நட்டா கண்டனம்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், “சுக்விந்தர் சிங் சுகு அரசின் அறிவும் ஞானமும் கெட்டுப் போய்விட்டதையே இது காட்டுகிறது. இதுபோன்ற அரசு ஆட்சியில் நீடிக்க எவ்வித உரிமையும் இல்லை” என்றார். இதையடுத்து கழிப்பறை வரி உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், “முந்தைய பாஜக அரசு இலவச தண்ணீர் உட்பட ரூ.5 ஆயிரம் கோடிக்கு சலுகைகளை அறிமுகம் செய்தது. என்றாலும் அக்கட்சியால் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கும் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போதைய காங்கிரஸ் அரசு குறைந்தபட்ச கட்டணம் விதித்து மானியத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. வரி செலுத்தும் சக்தி படைத்த குடும்பங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது” என்று தெரிவித்தார்.